370 சட்டப்பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு: நிதீஷ் குமார்

தோற்றல் வாக்கு இயந்திரத்தின் மீது பழிபோடுவது சகஜமானது தான் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
370 சட்டப்பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு: நிதீஷ் குமார்

தோற்றல் வாக்கு இயந்திரத்தின் மீது பழிபோடுவது சகஜமானது தான் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்கிழமை நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் சந்திப்பின் போது நிதிஷ் குமார் கூறியதாவது:

வாக்கு இயந்திரங்கள் மீதான சந்தேகங்கள் தேவையற்றது. அவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தான் வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ச்சியாக கேள்விகள் எழுந்து வருகின்றன.

அவை அனைத்துக்கும் இந்திய தேர்தல் ஆணையம் பலமுறை விளக்கம் அளித்துவிட்டது. இதில் உண்மை எதுவென்றால், தேர்தலில் தோற்றால் வாக்கு இயந்திரங்களின் மீது பழிபோடுவது சகஜமானது தான். இதில் எதுவும் புதிதல்ல.

பாஜக உடனான கூட்டணியில் எங்களுக்கு எந்த இடர்பாடும் கிடையாது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்படக்கூடாது, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படக் கூடாது, அயோத்தி விவகாரம் இருதரப்பு சம்மதத்துடன், நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் பாஜக உடன் கூட்டணி ஏற்படுத்திய முதல்நாளில் இருந்தே உறுதியாக இருக்கிறோம்.

இவ்விவகாரங்களில் பாஜக-வின் நிலைப்பாடு ஒன்றும் புதிதல்ல. ஏனென்றால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அதுவே கூட்டணி என்று வரும்போது இதுபோன்ற முரண்பாடுகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்படும். எனவே அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com