போபாலில் வெற்றி பெறுகிறாரா சாத்வி பிரக்யா? பழைய கொலை வழக்கை தூசி தட்டும் காங்கிரஸ்

​போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு எதிரான பழைய கொலை வழக்கை திரும்ப விசாரிப்பது தொடர்பாக மத்தியப் பிரதேசம் அரசு திட்டமிட்டு வருகிறது. 
போபாலில் வெற்றி பெறுகிறாரா சாத்வி பிரக்யா? பழைய கொலை வழக்கை தூசி தட்டும் காங்கிரஸ்


போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு எதிரான பழைய கொலை வழக்கை திரும்ப விசாரிப்பது தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது. 

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிட்டுள்ளார். 

அண்மையில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் போபால் மக்களவைத் தொகுதியில் சாத்வி பிரக்யா வெற்றி பெறலாம் என்று கணித்துள்ளன.

இந்த நிலையில், சாத்வி பிரக்யாவுக்கு எதிரான முன்னாள் ஆர்எஸ்எஸ் பிரசாரகர் சுனில் ஜோஷி கொலை வழக்கை திரும்ப விசாரிப்பது தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது. 

இதுதொடர்பாக மத்தியப் பிரதேச சட்ட அமைச்சர் பிசி சர்மா இன்று (செவ்வாய்கிழமை) தெரிவிக்கையில், 

"ஜோஷி கொலை வழக்கு தொடர்பாக தேவாஸ் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்த பிறகு, மேல்முறையீடு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். 

அப்போதைய மாவட்ட ஆட்சியர் அந்த வழக்கை சட்டத் துறைக்கு அனுப்பி ஆலோசனை கேட்காமல் தானே வழக்கை முடித்து வைத்தார். மேல்முறையீடு செய்வதற்கான அவசியம் இல்லை என்று முடிவு எடுக்காமல், அவர் சட்டத் துறைக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும்" என்றார். 

இதுதொடர்பாக, மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜ்னிஷ் அகர்வால் தெரிவிக்கையில், 

"இது சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக திக்விஜய் சிங்குக்கு எதிராக களமிறங்கியதனால் எடுக்கப்பட்ட முடிவு போல் தெரிகிறது. மத்தியப் பிரதேச அரசின் இந்த முடிவு பழி தீர்க்கும் செயல்" என்று விமரிசித்தார்.

சுனில் ஜோஷி வழக்கு:

பிரக்யா சிங்கின் நெருங்கிய சகாவாக இருந்தவர் சுனில் ஜோஷி. பின்னர் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சூழலில் சுனில் ஜோஷி மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 2007-ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்தக் கொலை வழக்கில் சாத்வி பிரக்யா உட்பட 8 பேர் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை முதலில் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரித்தனர். பின்னர் தேசியப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 2017 பிப்ரவரி மாதம் சுனில் ஜோஷி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தேவாஸ் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் "குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக பலவீனமான, முரண்பட்ட ஆதாரங்களே சமர்ப்பிக்கப்பட்டதாக" தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com