காங்கிரஸ்- மஜத கூட்டணிக்கு தோல்வி உறுதி: பி.எஸ்.எடியூரப்பா

மக்களவைத் தேர்தல் முடிவுகளில், கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணியின் மூத்தத் தலைவர்கள் தோல்வி அடைவது உறுதி என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
காங்கிரஸ்- மஜத கூட்டணிக்கு தோல்வி உறுதி: பி.எஸ்.எடியூரப்பா

மக்களவைத் தேர்தல் முடிவுகளில், கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணியின் மூத்தத் தலைவர்கள் தோல்வி அடைவது உறுதி என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள்  பாஜகவுக்கு எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் வந்துள்ளது. தேசிய அளவில் மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்துள்ளனர். 
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு மக்கள் விரும்பும் நலத் திட்டங்களை வழங்கியுள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுச் செல்ல மோடிதான் சிறந்தவர் என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் மோடியை ஆதரித்துள்ளனர். 
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி கட்சிகளின் ஆட்சியால் மக்கள் வேதனையடைந்து பாஜகவை ஆதரித்துள்ளனர். 
பாஜகவின் எதிர்பார்ப்புக்கும் மீறி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. 
மக்களவைத் தேர்தல் முடிவில், முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, மல்லிகார்ஜுன் கார்கே, வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா உள்ளிட்ட மூத்த தலைவர்களும், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலும் தோல்வி அடைவது உறுதி என்றார் எடியூரப்பா. 
துல்லியமான கருத்தல்ல-குமாரசாமி: இது தொடர்பாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் எழுப்பியிருந்தன. உலக அளவில், வளர்ந்த நாடுகளிலும் காகித வாக்குச்சீட்டு முறையில் பாரம்பரிய முறையில் தேர்தலை நடத்துகிறார்கள். 
மே 23-ஆம் தேதிக்கு பின்னர், பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஏதாவது குறை இருந்தால், அதை ஈடுகட்ட மாநிலக் கட்சிகளை கவரும் பொருட்டு பாஜக பயன்படுத்தும் செயற்கையாக பின்னப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட மோடி அலைதான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளாகும். அவர்கள் கூறுவது போல, இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மட்டுமே தவிர, துல்லியமான தேர்தல் கருத்தல்ல என்று குமாரசாமி கூறியுள்ளார்.
கணிப்புகளில் நம்பிக்கை இல்லை -பரமேஸ்வர்: துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸூக்கு நம்பிக்கை இல்லை. வாக்குகளை எண்ணியப் பின்னர், முடிவுகள் வெளியாகி, யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என தெரியவரும். கர்நாடகத்தில் காங்கிரஸ்-  மஜத கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும். 
தேர்தலுக்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்தன. அந்த புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. வாக்குகளை எண்ணுவதற்கு முன்னரே, பாஜகவினர் 300 முதல்  400 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என கருத்துக் கணிப்புகள் வெளியாவதைப் பார்த்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத்தன்மை மீது சந்தேகம் ஏற்படுகிறது. நடைபெற்ற தேர்தல் குறித்தும் சந்தேகம் ஏற்படுகிறது என்றார் பரமேஸ்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com