மேற்கு வங்கம்: வன்முறைப் பகுதிகளில் மறுதேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலின்போது வன்முறை நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல்,  நிர்மலா சீதாராமன்.
தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல்,  நிர்மலா சீதாராமன்.

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலின்போது வன்முறை நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்திலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 
அப்போது பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மேற்கொண்ட இறுதிக்கட்ட பிரசாரம், பாஜக- திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையேயான மோதலால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை சென்றனர். அப்போது மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலின்போது வன்முறை நடைபெற்ற அனைத்து பகுதிகளிலும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் வரையில், மத்திய பாதுகாப்புப் படைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பியூஷ் கோயல் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்திடம் 7 கட்ட மக்களவைத் தேர்தல்களின்போதும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து தெரிவித்தோம்.
மேலும், வன்முறை நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.
தேர்தலின்போது பாஜக வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி ஆதரவாளர்கள் ஆகியோரை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டினார். கடைசி கட்டத் தேர்தலிலும் பரவலாக வன்முறைகள் அரங்கேறின. இதை வைத்துப் பார்க்கையில், வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், வன்முறை கட்டவிழ்த்தப்படும் எனக் கருதுகிறோம்.
எனவே, வாக்கு எண்ணிக்கை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்று முடியும் வரையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும்.
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் இருக்கும் வரையில், மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்புப் படையினரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.
இதேபோல், ஒடிஸா, கர்நாடகம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்த மாநிலங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பி வைக்க வேண்டும், மேற்கண்ட 5 மாநிலங்களில் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம் என்றார் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com