வாக்குக் கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகள் இருக்கும்: அருண் ஜேட்லி

பெரும்பாலான வாக்கு கணிப்புகளை ஒட்டியே,  தேர்தல் முடிவுகளும் அமைந்திருக்கும் என்பதால்  இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்பதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி மீண்டும் மலரும்
வாக்குக் கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகள் இருக்கும்: அருண் ஜேட்லி

பெரும்பாலான வாக்கு கணிப்புகளை ஒட்டியே,  தேர்தல் முடிவுகளும் அமைந்திருக்கும் என்பதால்  இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்பதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி மீண்டும் மலரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். 
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான பெரும்பாலான, வாக்குக்கணிப்பு முடிவுகள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளன. 
ஆட்சியமைக்க தேவைப்படும் 272 எம்.பி.இடங்களைத் தாண்டி, 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 
இதுகுறித்து அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானப் பிறகு, சிலர் இந்த முடிவுகளை ஏற்க மறுத்து வீண் சண்டையும், கருத்துக்கணிப்பு  தவறானது என்றும் தொடர்ந்து கூறிக் கொள்கின்றனர். 
ஆனால், அதில் உள்ள உண்மை யாதெனில், பலத்தரப்பட்ட கருத்துக்கணிப்புகளும், ஒரே மாதிரியான முடிவுகளையே வெளியிட்டுள்ளன. எனவே, வாக்கு கணிப்பை ஒட்டியே இம்முறை தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கும் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. 
மேலும் மாதிரி வாக்கெடுப்பின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது யாரும் எந்த புகார்களையும் கூறவில்லை. உண்மையான தேர்தல் முடிவுகள் எதிர்கட்சிகளுக்கு பாதகமாக அமைந்துள்ளதால், தோல்வியை ஏற்க முடியாத அவர்கள் தங்கள் தோல்விக்கு காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையே சுட்டிக்காட்டுவார்கள். 
பெரும்பாலான, தேர்தல் முடிவுகள் கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான முடிவுகளை ஒட்டியே அமைந்துள்ளது. தற்போதைய முடிவுகளின் மூலம், இந்திய ஜனநாயகத்தில் பெரும் முதிர்ச்சி ஏற்பட்டிருப்பதுடன், ஜனநாயகத்துக்கு முக்கிய இடம் கிடைத்திருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.  
இம்முறை, தேசிய நலனை கருத்தில் கொண்டு யாருக்கு வாக்களித்தால் நாட்டுக்கு நல்லது என்ற நோக்கத்துடன் மக்கள் வாக்களித்துள்ளார்கள். 
வாக்களித்த அனைத்து மக்களும், ஒரே மாதிரியான எண்ணத்தைக் கொண்டிருந்ததும், பாஜகவுக்கு ஆதரவானஅலை காரணமாகவே     வெற்றி சாத்தியமாகும் என்று நம்புகிறேன். 
பெரிய கட்சிக்கு பொறுப்பேற்றுள்ள நபர்கள் (ராகுல் காந்தி), "அல்பட்ரோஸ்' கடற்பறவையை போல தங்கள் குடும்பத்தையே முன்னிலைப்படுத்தி, கட்சியை வளர்த்து வந்தனர். அவர்களுக்கு வெறும் கூட்டம் மட்டுமே கூடியதே தவிர, மக்களின் வாக்குகளை அவர்களால் பெற முடியவில்லை. 
எப்போதும் தலைவர்கள் எனப்படுபவர்கள் தகுதியின் பெயரால் தான் மதிப்பிடப்படுவார்களே தவிர குடும்பத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ அவர்களுக்கு பெருமை கிடையாது. நம்முடைய பிரதமரை பொருத்தவரை எப்போதும் ஜாதி அடிப்படையில் பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையிலேயே அணுகுவதால் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டு விட்டனர். 
இம்முறை, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com