சுடச்சுட

  

  அனைத்து வாக்கு ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ணக் கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

  By DIN  |   Published on : 22nd May 2019 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SUPREMEcourtcut


  மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்போது, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
  பதினேழாவது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை (மே 23) நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 
  மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. 303 தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தல் வரை 49 தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக இயங்காமல் போனதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்டிருந்த வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரத்துடன் தவறுதலாக இணைக்கப்பட்டது. 22 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்த பிறகே, வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரம் மீண்டும் சரியாக இணைக்கப்பட்டது. 
  இவற்றால் ஏற்பட்டுள்ள அசெளகரியங்களைச் சரிசெய்யும் வகையில், அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை, வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. 
  முட்டாள்தனமானது: இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஏற்கெனவே விசாரணை நடத்தி தீர்ப்பளித்துவிட்டார். அப்படியிருக்கும்போது, ஒரே விவகாரத்துக்காக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நீங்கள் (மனுதாரர்கள்) ஏன் நாடுகிறீர்கள்? இது முற்றிலும் முட்டாள்தனமானது. தலைமை நீதிபதியின் தீர்ப்பை எங்களால் ரத்து செய்ய இயலாது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
  எதிர்க்கட்சிகளின் சட்டப் போராட்டம்: தேர்தல் நடைமுறைகளில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 50 சதவீத வாக்குச் சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், வாக்கு ஒப்புகைச்சீட்டுகளைச் சரிபார்க்க வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் கட்சி தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்கு ஒப்புகைச்சீட்டு சரிபார்க்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
  எதிர்க்கட்சிகளின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்குப் பதிலாக, 5 வாக்குச் சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்குமாறு தேர்தல் ஆணையத்துக்குக் கடந்த மாதம் 8-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai