சுடச்சுட

  

  சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல்: இரு போலீஸார் காயம்

  By DIN  |   Published on : 22nd May 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  சத்தீஸ்கர் மாநிலத்தில் ரோந்து சென்ற சிறப்பு ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்ஸல்கள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் இரு போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் விரைந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் கோகுந்தா கிராமப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சிறப்பு ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு ரிசர்வ் போலீஸ் படையினர் தங்கள் வாகனத்தில் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தப் பாதையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை நக்ஸல்கள் வெடிக்கச் செய்தனர். வாகனம் சற்று கடந்து சென்ற பிறகு குண்டு வெடித்ததால், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இரு போலீஸார் மட்டும் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்தனர்.
  இதையடுத்து, அப்பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சுதாரித்துக் கொண்ட போலீஸாரும் உரிய பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் சிறிது நேரம் மோதல் நீடித்தது. இதன் பிறகு நக்ஸல்கள் வனப் பகுதியில் தப்பியோடிவிட்டனர். இந்த மோதலில் யாருக்கும், காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
  இதைத் தொடர்ந்து காயமடைந்த இரு போலீஸாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, உயர்சிகிச்சைக்காக ராய்ப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
  இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
  9 நக்ஸல்கள் கைது:  சத்தீஸ்கரில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளுக்காகத் தேடப்பட்டு வந்த 9 நக்ஸல்கள் செவ்வாய்க்கிழமை காவல் துறையினரிடம் சரணடைந்தனர்.
  இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
  கொலை, கொலை முயற்சி, காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டு வந்த 7 நக்ஸல்கள் பிஜப்பூர் மாவட்ட காவல் துறையினரிடம் சரணடைந்தனர். மேலும் 2 நக்ஸல்கள் சுக்மா மாவட்ட காவல் துறையினரிடம் சரணடைந்தனர். கடந்த 2014-ஆம் ஆண்டு கசல்பாத் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 14 பாதுகாப்புப் படையினர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக இருவரும் தேடப்பட்டு வந்தனர். இவர்களில் மூன்று பேரைப் பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது என்று அவர்கள் தெரிவித்தனர்.
  2 நக்ஸல்கள் கைது: இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் 2 நக்ஸல்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
  இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தின் மலைப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். அப்போது 2 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து வில்-அம்பு, கண்ணிவெடிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai