சுடச்சுட

  
  modieps

  தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 


  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், தில்லி அசோகா ஹோட்டலில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தில்லி செவ்வாய்க்கிழமை விருந்து அளித்தார்.
  பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த விருந்தில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
  இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பொன்னாடை போர்த்தினர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், பாதகமாக அமைந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்  ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
  இதில் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், சிவசேனைக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா படேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரும் பங்கேற்றனர். 
  தமிழகத்தில் இருந்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக  பொருளாளர் பிரேமலதா, துணைப் பொருளாளர் எல்.கே. சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும்,  தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் பங்கேற்றனர்.
  முன்னதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டதாலேயே கொள்கைகளைக் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தம் அல்ல.  மத்தியில் பாஜக ஆட்சி தொடரும். தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மீண்டும் மோடி பிரதமராவார். சட்டப்பேரவைத் இடைத்தேர்தலிலும் பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றிபெறும். மாநிலத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai