சுடச்சுட

  

  தேர்தல் பார்வையாளர்கள் நியமன விவகாரம்: சுயேச்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி

  By DIN  |   Published on : 22nd May 2019 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மேற்கு வங்கத்தில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பாரக்பூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களின் காவல் துறை சிறப்பு பார்வையாளராக விவேக் தூபேவும், மேற்கு வங்க சிறப்பு பார்வையாளராக அஜய் வி.நாயக்கும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்களின் நியமனத்தை எதிர்த்து, பாரக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராமு மண்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
  தேர்தல் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட தூபே, நாயக் ஆகியோரது நியமனம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. பணியில் உள்ள அதிகாரிகளையே பார்வையாளராக நியமிக்க முடியும் என சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், சட்டத்துக்குப் புறம்பாக பணி ஓய்வுபெற்ற அதிகாரிகள் தேர்தல் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணியில் பல அதிகாரிகள் இருக்கும்வேளையிலும், பணி ஓய்வுபெற்ற அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 
  இதன்மூலம், அவர்கள் பாரபட்சமாக நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால், தான் சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக பாதிப்புகள் இருக்கின்றன. அதை உறுதிசெய்யும் வகையில், மேற்கு வங்கத்தின் நிலை குறித்து வெளிப்படையாகப் பல்வேறு தேவையற்ற கருத்துகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, அவர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
  இந்த மனு மீது கடந்த 6-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும், மேற்கு வங்க அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மக்களவைத் தேர்தல் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. எனவே இந்த மனுவைத் தற்போது விசாரிக்கத் தேவையில்லை என்று வாதிட்டார்.
  இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்றனர். அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கு பணிகள் தடைப்பட்டுள்ளன என்றார்.
  இதைக் கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவடைந்துவிட்டதால், இந்த மனுவை விசாரிக்க நாங்கள் தயாராக இல்லை என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai