சுடச்சுட

  

  பாகிஸ்தான் படகில் ரூ.600 கோடி போதைப்பொருள்: இந்திய கடலோர காவல்படை பறிமுதல்

  By DIN  |   Published on : 22nd May 2019 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  boat1

  குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மீன் பிடிப்படகை விரட்டிச் சென்ற இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல்.


  குஜராத் மாநில கடல்பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மீன் பிடிப்படகில் இருந்து ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை இந்தியக் கடலோர காவல்படையினர் கைப்பற்றினர்.
  கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த படகில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  குஜராத்தின் ஜகாவ் கடற்பகுதியை ஒட்டிய சர்வதேச எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் மதீனா என்ற படகு போதைப் பொருளுடன் காத்திருக்கிறது. அப்பகுதியில் வரும் மற்றொரு கப்பலுக்கு அந்த போதைப் பொருள் அனுப்பப்பட இருக்கிறது என்று உளவுத் துறை மூலம் கடலோரக் காவல்படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒரு கப்பல் மற்றும் இரு அதிவிரைவு படகுகளுடன் கடலோரக் காவல் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
  கடலோரக் காவல் படையினர் தங்களை நோக்கி வேகமாக வருவதை அறிந்த அந்தப் படகில் இருந்தவர்கள், படகை வேகமாகச் செலுத்தத் தொடங்கினர். இதையடுத்து, கடலோரக் காவல் படையினரும் அவர்களை விரட்டிச் சென்றனர். 
  அப்போது படகில் இருந்தவர்கள் சில பைகளை கடலில் வீசினர். இதைத் தொடர்ந்து வேகமாகச் சென்ற கடலோரக் காவல் படையினர் அந்தப் படகை சுற்றி வளைத்து நிறுத்தி, தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். படகில் இருந்த 6 பேரையும் மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்து கடலில் வீசப்பட்ட பைகளில் 7 பைகள் மட்டும் மீட்கப்பட்டன. அவற்றை சோதனை செய்ததில் அதில் ரூ.600 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து,  அந்தப் படகு கரைக்குக் கொண்டு வரப்பட்டது. அதில் இருந்தவர்கள் விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
  முன்னதாக கடந்த மார்ச் மாதமும் பாகிஸ்தானைச் சேர்ந்த படகில் இருந்து 100 கிலோ போதைப் பொருளை கடலோரக் காவல்படையினர் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  இதற்கு முன்பு மிக அதிகமாக  ரூ.3,500 கோடி மதிப்புள்ள 1,500 கிலோ போதைப் பொருளைக் கடந்த 2017-ஆம் ஆண்டு கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai