சுடச்சுட

  

  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன: தேர்தல் ஆணையம்

  By DIN  |   Published on : 22nd May 2019 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ELECTION_COMMISSION_EPS11


  வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பிவரும் வேளையில் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தபிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் காணொலிகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானதும், அடிப்படை ஆதாரமற்றதும் ஆகும். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எதுவும் அந்தக் காணொலியில் இடம்பெறவில்லை; தேர்தலில் பயன்படுத்தப்படாத இயந்திரங்களே இடம்பெற்றுள்ளன. இதை உறுதியுடனும், தெளிவுடனும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.
  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டதும், அந்த அறைக்கதவுகள் மூடி முத்திரையிடப்பட்டதும் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அந்த அறைகளைச் சுற்றி மத்திய ஆயுதக் காவல் படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
  வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்திலும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடியும்வரை அங்கு நடைபெறும் அனைத்தும் கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகும்.
  தேர்தல் நடைமுறைகள்: பல்வேறு கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றி 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நாளன்று, அந்தந்தத் தொகுதி வேட்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் மட்டுமே அந்த அறைகள் திறக்கப்படும். வாக்கு எண்ணப்படுவதற்கு முன்பாக, வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண், அதன் அடையாள அட்டை ஆகியவை கட்சிப் பிரதிநிதிகளிடம் உறுதிபடுத்தப்படும்  என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai