அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?

அருணாசலப் பிரதேசம், திராப் மாவட்டத்தில் நாகாலாந்து தேசிய சோஷலிஷ கவுன்சில் (என்எஸ்சிஎன்) என்று சந்தேகிக்கப்படும்
அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?


அருணாசலப் பிரதேசம், திராப் மாவட்டத்தில் நாகாலாந்து தேசிய சோஷலிஷ கவுன்சில் (என்எஸ்சிஎன்) என்று சந்தேகிக்கப்படும்  நாகா தீவிரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ திராங் அபோ, அவரது மகன் லாங்கேம் உள்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  
தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கோன்சா மேற்கு தொகுதி எம்எல்ஏ திராங் அபோ (41). தனது குடும்பத்தினருடன் அஸ்ஸாம் சென்று விட்டு, தனது சொந்த தொகுதிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். மொத்தம் 4 வாகனங்களில் 3 போலீஸார் மற்றும் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் உள்பட மொத்தம் 15 பேருடன் சென்று கொண்டிருந்தனர். அருணாசல பிரதேச மாநிலம், திராப் மாவட்டம், போகபானி கிராமம் அருகே செவ்வாய்கிழமை மதியம் 11.30 மணியளவில் வரும்போது தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 
இச்சம்பவத்தில், எம்எல்ஏ திராங் அபோ, அவரது மகன் லாங்கேம் உள்பட மொத்தம் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்று மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.கே.சிங் தெரிவித்தார். 
பாதுகாப்பு அதிகாரி இருவர் காயமடைந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் அந்த மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட திராங் அபோவுக்கு மீண்டும் கட்சி வாய்ப்பளித்திருந்த நிலையில் அவரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.  
இத்தாக்குதலுக்கு நாகா தீவிரவாதகுழுவான என்எஸ்சிஎன் அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 
முதல்வர் பெமா காண்டு கண்டனம்: மாநில முதல்வர் பெமா காண்டு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 
மேகாலய முதல்வர் கான்ராட் கே.சங்மாவும் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் சுட்டுரைப் பதிவில், எம்எல்ஏ திராங் அபோ மறைவு குறித்த திடீர் தகவல் அறிந்ததும் தேசிய மக்கள் கட்சி கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது.   அவரது மறைவு அருணாசலப் பிரதேச மக்கள் மத்தியிலும், அவரது குடும்பத்தார் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அருணாசலப் பிரதேச காங்கிரஸும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
ராஜ்நாத் சிங் கண்டனம்: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்எல்ஏ திராங் அபோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தியதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் சீர்குலைக்க நினைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com