உ.பி.யில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாகப் புகார்: பல்வேறு கட்சியினர் போராட்டம்

உத்தரப் பிரதேசத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக வெளியான காணொலியால், பல்வேறு கட்சியினர் போராட்டத்தில்


உத்தரப் பிரதேசத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக வெளியான காணொலியால், பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசத்தின் சந்தெளலி மக்களவைத் தொகுதியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாகக் காணொலி ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காஜிபூர் தொகுதியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்ற அதிகாரிகள் முயன்றதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஜிபூர் தொகுதியின் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் அஃப்சல் அன்சாரியும் அவரது தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபடும் காணொலியும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வெளியேறுமாறு காவல் துறையினர் கூறுவதும், அதை ஏற்க மறுத்து காவல் துறையினருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் அடங்கியுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகில் சென்றுவர பாஜக நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக அன்சாரி குற்றஞ்சாட்டினார்.
பயன்படுத்தப்படாத இயந்திரங்கள்: இந்நிலையில், சந்தெளலி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே கோரியுள்ளார். இந்தப் புகார்கள் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வரலு கூறியதாவது:
காஜிபூர் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
சந்தெளலியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாகப் பரப்பப்படும் காணொலிகள் எதுவும் உண்மையில்லை. தேர்தலில் பயன்படுத்தப்படாத இயந்திரங்கள் அந்த மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டதே காணொலியில் இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பயன்படுத்தப்படாத வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தனியாக வேறொரு அறையில் வைக்கப்பட்டன.
சந்தேகம் தேவையில்லை: வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த இடத்தை வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் தொடர்ந்து கண்காணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எந்த சந்தேகமும் எழுப்பத் தேவையில்லை என்றார் அவர்.
இதையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மர்ம நபர்கள் நடமாட்டம்: இதனிடையே, மகாராஷ்டிரத்தின் தெற்கு மும்பை தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் காங்கிரஸ் பிரதிநிதிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மர்ம நபர்கள் மற்றும் மர்ம வாகனங்களின் நடமாட்டம் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.  
உடனடி நடவடிக்கை: வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:
வாக்குப் பதிவு இயந்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்து வருகின்றன. உத்தரப் பிரதேசம், பிகார், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், மக்களின் சந்தேகமும், கோபமும் அதிகரித்துள்ளது.
அவையனைத்தும் பயன்படுத்தப்படாத இயந்திரங்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை வேட்பாளர்களின் பிரதிநிதிகளிடம் காண்பிக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் பாரபட்சமில்லாமல் கடைப்பிடிக்கப்படுவதைத் தேர்தல் ஆணையம் உறுதிபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் உறுதியான உடனடி நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு: இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:
வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குத் தேர்தல் ஆணையம்தான் முழுப் பொறுப்பாகும். வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து மக்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்பட்டுவிடக் கூடாது. யூகங்கள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com