மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக பிரக்யா உள்பட 3 பேருக்கு விலக்கு

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர்,  ராணுவ துணை தளபதி பிரசாத் புரோஹித், சுதாகர் சதுர்வேதி ஆகிய 3 பேரும் இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக பிரக்யா உள்பட 3 பேருக்கு விலக்கு


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர்,  ராணுவ துணை தளபதி பிரசாத் புரோஹித், சுதாகர் சதுர்வேதி ஆகிய 3 பேரும் இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு மும்பையில் உள்ள  சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் மசூதி ஒன்றின் அருகே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் 
மேற்பட்டோர் காயமடைந்தனர். 
இச்சம்பவம் தொடர்பான வழக்கை மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், புரோஹித், பிரக்யா, முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய, அஜய் ரஹிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி, சமீர் குல்கர்னி ஆகிய  7 பேருக்கு எதிராக  மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இப்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
தற்போது, இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்து வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது குறித்து நீதிபதி கடந்த வாரம் அதிருப்தி தெரிவித்தார். அதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,  நீதிமன்றத்தில் இந்த வாரம் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, பிரக்யா தாக்குர், புரோஹித், சதுர்வேதி ஆகிய மூன்று பேரும், வழக்குரைஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்தனர்.
இந்த விவகாரம் சிறப்பு நீதிபதி வினோத் படல்கர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரக்யா உள்ளிட்டோர் தரப்பு வழக்குரைஞர்கள் வாதாடுகையில், மக்களவைத் தேர்தலில், மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பிரக்யா போட்டியிட்டார். உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூர் தொகுதியில் சுயேச்சையாக சதுர்வேதி போட்டியிட்டார். 
தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளிவர இருப்பதால், பிரக்யாவுக்கும், சதுர்வேதிக்கும் அதுதொடர்பாக முக்கிய பணிகள் உள்ளன. நேரில் வருவதில்  புரோஹித்துக்கு சில  சிக்கல்கள் உள்ளன. அதனால் நீதிமன்றத்தில் இந்த வாரம்  ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கூறினர். 
அதையேற்ற நீதிபதி, அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார்.

பிரக்யா மீதான கொலை வழக்கு: மீண்டும் விசாரிக்க ம.பி. அரசு முடிவு
மத்தியப் பிரதேசம், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாக்குர், தேர்தலில் வெற்றி பெறுவார் என்று வாக்கு கணிப்பு முடிவுகள் தெரிவித்த நிலையில், பிரக்யா மீதான கொலை வழக்கை 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விசாரிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு தேவாஸ் மாவட்டத்தில் முன்னாள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரக்யா உள்பட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், சரியான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்படாததால், அந்த வழக்கில் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக மத்தியப் பிரதேச சட்ட அமைச்சர் பி.சி. சர்மா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்திலும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com