முதலில் ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்க்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதற்கு முன், முதலில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும்
தில்லியில் தேர்தல் ஆணையரை செவ்வாய்க்கிழமை சந்தித்த பின்னர்,  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.
தில்லியில் தேர்தல் ஆணையரை செவ்வாய்க்கிழமை சந்தித்த பின்னர்,  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.


மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதற்கு முன், முதலில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் 22 எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை கூட்டாக வலியுறுத்தின.
மேலும், வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் நேர்மையையும், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள், வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன. 
மேலும், அனைத்து ஒப்புகைச்சீட்டுகளையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. 
எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை: இந்தச் சூழலில், தில்லியில் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியில் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், அசோக் கெலாட், அகமது படேல், அபிஷேக் சிங்வி, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன்,  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பிரபுல் படேல்,  மஜீத் மேமோன்,  திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் மனோஜ்  ஜா, லோக்தாந்திரிக் ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஜாவேத் ரஸ்வா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் குபேந்திர ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், வாக்கு எண்ணிக்கையின்போது நேர்மையை உறுதி செய்வது, வாக்கு எண்ணிக்கை நாளில் 22 கட்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பது, அதன் பின்னர் மத்தியில் கூட்டணி அரசை அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. 
தேர்தல் ஆணையருடன் சந்திப்பு: இக்கூட்டத்துக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதற்கு முன் ஒப்புகைச்சீட்டுகளை (விவிபிஏடி) எண்ண வேண்டும்; அவற்றை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும். இந்த சரிபார்ப்பில் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி சரிபார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரிடம்  கோரிக்கை மனுவை எதிர்க்கட்சித் தலைவர்கள் அளித்தனர். அந்த மனுவில் 22 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். அதில், நாட்டின் 70 சதவீதமான வாக்காளர்களை தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குலாம் நபி ஆஸாத் (காங்கிரஸ்): மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதற்கு முன்பு,  ஒப்புகைச் சீட்டுகளை (விவிபிஏடி) எண்ண வேண்டும். 
வாக்குகள் எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பது தெரியவந்தால், ஒட்டுமொத்த (சட்டப்பேரவை) தொகுதியில் உள்ள ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண வேண்டும். இக்கோரிக்கைகளை தேர்தல் ஆணையர்களிடம் வலியுறுத்திள்ளோம்.
அபிஷேக் சிங்வி (காங்கிரஸ்): ஒப்புகைச்சீட்டுகளை எண்ணுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல மாதங்களாகக் கோரி வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை (மே 22) ஆலோசிக்கப்படும் என தேர்தல் ஆணையர்கள் தெரிவித்துள்ளனர்.
சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): வாக்கு எண்ணிக்கையின் போது, ஒப்புகைச்சீட்டுகளை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் சரிபார்ப்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் நடைமுறையை உருவாக்க வேண்டியுள்ளது. ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் போது ஒரு  முரண்பாடு இருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும். அப்போதுதான் தேர்தல் நடைமுறையில் நேர்மையைக் கடைப்பிடிக்க முடியும்.
சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்): மக்கள் தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் மதிக்க வேண்டும். மக்கள் தீர்ப்பை பொய்யாக மாற்றியமைக்க முடியாது.
சதீஷ் சந்திர மிஸ்ரா (பகுஜன் சமாஜ்): உ.பி.யில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வதில் குழப்பங்கள் நீடிக்கின்றன. எனவே, உத்தரப் பிரதேசத்தில் மத்திய துணை ராணுவப் படைகளை அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
மஜீத் மேமோன் (தேசியவாத காங்கிரஸ் கட்சி): வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில்  தனியார் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்வது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். வாக்கு எண்ணிக்கை நாளில் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையே தொடர்பு கொள்வது, பின்னர் உத்திகளை வகுப்பது ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com