வாக்கு எண்ணும் முறை: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

வாக்குகளை எண்ணுவதற்கு முன் ஒப்புகைச்சீட்டுகளை (விவிபிஏடி) எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. 
வாக்கு எண்ணும் முறை: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

வாக்குகளை எண்ணுவதற்கு முன் ஒப்புகைச்சீட்டுகளை (விவிபிஏடி) எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள், வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றன.  மேலும், அனைத்து ஒப்புகைச்சீட்டுகளையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. இந்தச் சூழலில், தில்லியில் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியில் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இக்கூட்டத்துக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதற்கு முன் ஒப்புகைச்சீட்டுகளை (விவிபிஏடி) எண்ண வேண்டும்; அவற்றை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும். இந்த சரிபார்ப்பில் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைந்துள்ள பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணி சரிபார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரிடம்  கோரிக்கை மனுவை எதிர்க்கட்சித் தலைவர்கள் அளித்தனர். அந்த மனுவில் 22 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். 

இந்நிலையில் வாக்குகளை எண்ணுவதற்கு முன் ஒப்புகைச்சீட்டுகளை (விவிபிஏடி) எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துவிட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com