சுடச்சுட

  

  அஸ்தானா மீதான விசாரணைக்குக் கூடுதல் அவகாசம்: சிபிஐயின் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

  By DIN  |   Published on : 23rd May 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rakesh-asthana


  சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கூடுதல் காலஅவகாசம் கோரி சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
   ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர், ராகேஷ் அஸ்தானா மீது அளித்த லஞ்சப் புகாரின் அடிப்படையில், அஸ்தானா மீதும், அவருக்கு உதவியதாகக் கூறப்பட்ட சிபிஐ டிஎஸ்பி தேவேந்தர் குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
  அதையடுத்து, தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவைக் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, அஸ்தானா, தேவேந்தர் குமார் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை 10 வாரத்துக்குள் முடிக்கவும் சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகேஷ் அஸ்தானா மேல் முறையீடு செய்துள்ளார்.
  இந்நிலையில், வழக்கு விசாரணைக்குக் கூடுதல் காலஅவகாசம் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி, அஸ்தானாவுக்கு எதிரான லஞ்சப் புகார் தொடர்பாக நேர்மையுடனும், வெளிப்படையாகவும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்காக 4 மாதங்கள் கூடுதல் காலஅவகாசம் கோருகிறோம் என்று வாதிட்டார்.
  அஸ்தானா தரப்பு வழக்குரைஞர் சிபிஐயின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனு மீதான உத்தரவை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai