அருணாசல்: எம்எல்ஏவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம்

அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ திராங் அபோ உள்பட 11 பேரை நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சிலை (என்எஸ்சிஎன்) சேர்ந்த தீவிரவாத


அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ திராங் அபோ உள்பட 11 பேரை நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சிலை (என்எஸ்சிஎன்) சேர்ந்த தீவிரவாத அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களை பிடிக்க ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் போலீஸார் மற்றும் மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு ஆய்வு மூலம் தீவிரதேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அருணாசலப் பிரதேசத்தில், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கோன்சா மேற்கு தொகுதி எம்எல்ஏ திராங் அபோ (41). தனது குடும்பத்தினருடன் அஸ்ஸாம் சென்று விட்டு, சொந்த தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை காரில் திரும்பிய போது, தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது மகன் லாங்கேம் உள்பட 11 பேர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர்.  
இச்சம்பவத்தையடுத்து, ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் போலீஸாருடன் மாநில போலீஸாரும் இணைந்து தீவிரவாதிகளை கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திராப் காவல்துறை உதவி ஆணையர் பி.என்.துங்கன் தெரிவித்தார். 
மேலும் அவர் கூறியதாவது, தற்போது, அருணாசலப் பிரதேசத்திலும், மாநிலத்தையொட்டி அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும் தேடுதலில் ஈடுபடுவதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இச்சம்பவத்தை நிகழ்த்தியதாக கருதப்படும் நாகா தீவிரவாத அமைப்பினர் கோன்ஸாவில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகருக்கு இடைப்பட்ட பகுதியில் பதுங்கியிருக்கக் கூடும் என கருதப்படுகிறது. 
சம்பவம் தொடர்பாக போலீஸார் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. இருப்பினும், அப்பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து, தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பிரேதப் பரிசோதனை முடிந்து, இறந்தவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இதுகுறித்து, பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகையில், இந்த சம்பவத்தில் நாகா தீவிரவாத அமைப்பான என்எஸ்சிஎன்(ஐஎம்)னுக்கு தொடர்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 15 பேர் கொண்ட தீவிரவாத கும்பல்தான் துப்பாக்கியால் சுட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த கும்பல் திராங் அபோவுடன் வந்த ஒரு காரையும் தீ வைத்து எரித்து விட்டு தப்பி விட்டது என்று தெரிவித்தனர்.  
அதேபோல, அருகிலுள்ள சாங்லாங் மாவட்டத்தை சேர்ந்த போலீஸாரும் கோன்ஸா பகுதிக்கு தீவிரவாதிகளை தேடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக, கிழக்குப்பகுதி காவல்துறை ஐஜி மற்றும் டிஐஜி தெரிவித்தனர்.  
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், தீவிரவாதிகள் தேடி டுதல் வேட்டையில் ஈடுபடுவதற்காக கிழக்கு அருணாசலப் பிரதேசத்திற்கு கூடுதல் ராணுவப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com