எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம்: ராம்விலாஸ் பாஸ்வான்

தோல்வியைத் தழுவி விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை தெரிவித்தார். 
எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம்: ராம்விலாஸ் பாஸ்வான்


தோல்வியைத் தழுவி விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் புதன்கிழமை தெரிவித்தார். 
 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக, ஒப்புகை சீட்டுகளை எண்ணி, பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க வேண்டும் என 22 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் செவ்வாய்க்கிழமையன்று தில்லியில் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 
இதுகுறித்து மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர்கள், தாங்கள் தோல்வியைத் தழுவி விடுவோம் என்ற நிலை வரும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது புகார் கூறத் தொடங்கி விடுவார்கள் என்று பல மாதங்களுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். 
அவர்கள், வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க வேண்டும் என்றும், இந்தியாவை பின்னோக்கி செல்ல வைக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். இதுதொடர்பாக, ஏற்கனவே 4 முறை உச்சநீதிமன்றமும் தனது உத்தரவை தெளிவாக கூறி விட்டது. எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை சமாளிக்க இப்போதே கட்டுக்கதைகளை உருவாக்கத் தொடங்கி விட்டன. 
அவர்கள் வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியானவை என்றும், தோல்வியுற்றால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது புகார்களை தெரிவிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வழக்கம். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத மனப்பான்மையால், இந்திய ஜனநாயகமும், அரசியலமைப்புச்சட்டமும் பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சியினரால் முதலில் ஒற்றுமையுடன் இருக்கவே முடியாது; அவர்களால் எப்படி தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட முடியும். ஆனால், பாஜக தலைமையில் அமைந்திருப்பது ஒத்திசைவான கூட்டணியாகும். தில்லியில், கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸுக்கும், ஆம்ஆத்மிக்கும் இடையே வெறும் 7 தொகுதிகளுக்கே உடன்பாடு எட்ட முடியாமல் தனித்து போட்டியிடும்போது, அவர்களால் எப்படி 543 தொகுதிகளிலும் ஒன்றிணைந்து போட்டியிட இயலும்? 
தேசிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடிதான் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com