ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வர விரும்புகிறோம்: ஆளுநர் சத்யபால் மாலிக்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 மாதங்களாக அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வர விரும்புவதாக அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வர விரும்புகிறோம்: ஆளுநர் சத்யபால் மாலிக்


ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 மாதங்களாக அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வர விரும்புவதாக அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி செய்த மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து பாஜக விலகியதையடுத்து, மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்த மாநில சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்திருந்தார். இதனிடையே, குதிரை பேரத்தில் கட்சிகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சட்டபேரவையை கலைப்பதாக ஆளுநர் அறிவித்தார். 
இந்நிலையில், ஆளுநர் ஆட்சியின் 6 மாதங்கள் முடிவடைந்ததையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது வரும் ஜூன் 19-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மாநிலத்தில் குடியரத் தலைவர் ஆட்சியின்போது, குடியரசுத் தலைவரின் சார்பாக ஆளுநர் தலைமையில் நிர்வாகம் செயல்படும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு, காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலும் நடத்த வேண்டி அந்த மாநில கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு, மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலை இணைந்து நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், ஜஹாங்கீர் மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க ஆளுநர் தலைமையிலான நிர்வாகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் விருப்பமில்லாமல் இருப்பது குறித்து  செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
எனக்கு தெரிந்த வரை, என் நிர்வாகத்தின் கீழ் இயங்குபவர்கள் யாரும் அவ்வாறு எண்ணவில்லை. மாநிலத்தில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். மாநிலத்தில் சட்டப்பேரவை நடத்துவது குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையம்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார் சத்யபால் மாலிக்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்த முடிவை அறிவிக்க வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com