ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது: மனுதாரர்களின் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தகவல்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்து உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளதாகத் தங்களது எழுத்துப்பூர்வ அறிக்கையில்
ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது: மனுதாரர்களின் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தகவல்


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்து உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளதாகத் தங்களது எழுத்துப்பூர்வ அறிக்கையில் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை, ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த ஆங்கில நாளிதழின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் செளரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்கள் அடிப்படையிலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, மறுஆய்வு மனுக்களின் மீதான தீர்ப்பைக் கடந்த 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த 41 பக்க எழுத்துப்பூர்வ அறிக்கை பொதுவெளியில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:
ரஃபேல் விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில் பல்வேறு உண்மைகளை மத்திய அரசு மறைத்துள்ளது. இந்த விவகாரத்தில், வேண்டுமென்றே உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்தியுள்ளது. மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றம் மிகுந்த நம்பிக்கை வைத்து, ரஃபேல் விவகாரம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு கூறியிருந்தது. 
ஆனால், பொய்யான ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் நம்பிக்கையை மத்திய அரசு இழந்துவிட்டது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com