வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 46 :  திட்டமிட்டபடி ரிசாட் - 2 பி செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

புவிப் பரப்பை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் அதி நவீன ரிசாட் - 2 பி செயற்கைக்கோள் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில்
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து  ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட   பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து  ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட   பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட்


புவிப் பரப்பை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் அதி நவீன ரிசாட் - 2 பி செயற்கைக்கோள் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட் மூலம் அந்தச் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள்  சாத்தியமாக்கினர்.
இது, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வெற்றி வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல் என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ரிசாட் - 2 பி செயற்கைக்கோளின் வாயிலாக பாதுகாப்புத் துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வேளாண்மை, நீர்ப்பரப்பு, பேரிடர் சூழல்கள், வனம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை அறிந்து கொள்ளவும் முடியும் என்று விண்வெளி ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரோ சார்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அலைவரிசை பயன்பாடு, தொலையுணர் ஆய்வு,  தகவல் - தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பல செயற்கைக்கோள்கள்  விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
கடந்த மாதம் எமிசாட் செயற்கைக்கோளைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக, நவீன பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட்டை ஏவ முடிவு செய்யப்பட்டது. அதில், உள்நாட்டு பயன்பாட்டுக்கான ரிசாட் - 2 பி செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிடப்பட்டது.
அதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி நான்கு நிலைகளை உள்ளடக்கிய பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட் வடிவமைக்கப்பட்டது.
39.4 மீட்டர் உயரம் கொண்ட அந்த  ராக்கெட்டில் 615 கிலோ எடை கொண்ட ரிசாட் - 2 பி செயற்கைக்கோள் இணைக்கப்பட்டது. பொதுவாக, ராக்கெட்டின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அதற்கான கணினி தொழில்நுட்பத்துக்காகவும் சிறப்பு சாதனங்கள் (பிராசஸர்கள்) பயன்படுத்தப்படுவது உண்டு. 
அதன்படி, இதுநாள் வரை வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பிராசஸர்களே இந்திய ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஆனால், இம்முறை முழுக்க, முழுக்க உள்நாட்டில் தயாரான விக்ரம் பிராசஸர் பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டது. சண்டீகரில் அமைந்துள்ள செமி-கண்டக்டர் ஆய்வகத்தில் அது தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்: இந்தச் சூழலில், சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட்டைச் செலுத்துவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியது.
அதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.  கவுன்ட் டவுன் நிறைவடைந்து புதன்கிழமை அதிகாலை சரியாக 5.30 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 46 விண்ணில் சீறிப் பாய்ந்தது.
ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதில் இருந்த நிலைகள் படிப்படியாக பிரியத் தொடங்கின. 
தரையிலிருந்து புறப்பட்ட 15 நிமிஷங்கள் 29 விநாடிகளில் ரிசாட் - 2பி செயற்கைக்கோளானது ராக்கெட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு புவி வட்டப் பாதையின் 555 கிலோ மீட்டர் உயரத்தில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்பட்டது. மொத்தம் 5 ஆண்டுகளுக்கு ரிசாட் - 2 பி   பயன்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் வரிசையில் அதி நவீன தொழில்நுட்பங்களையும், கேமராக்களையும் உள்ளடக்கிய செயற்கைக்கோளை இந்தியா அனுப்பியிருப்பது சர்வதேச அளவில் நமது விண்வெளி ஆராய்ச்சியை பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
நேரில் கண்டுகளித்த 5 ஆயிரம் பேர்: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி - சி 46 ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட்டதை 5 ஆயிரம் பேர் புதன்கிழமை நேரில் கண்டுகளித்தனர்.
இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை பொதுமக்கள் நேரடியாக காணும் வசதி அண்மையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக திறந்தவெளி அரங்கு ஒன்றும் கட்டப்பட்டது. 
பல்லாயிரக்கணக்கானோர் அமரக் கூடிய அந்த அரங்கில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு ஆன்லைன் முன்பதிவு அண்மையில் தொடங்கியது. அதன் வாயிலாக, முன்பதிவு செய்த 5 ஆயிரம் பேர் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் ஏவப்படுவதை புதன்கிழமை நேரில் பார்த்தனர்.

சர்வதேச எல்லையைக் கண்காணிக்க முடியும்...
ரேடார் இமேஜிங் சாட்டிலைட் எனப்படும் ரிசாட் செயற்கைக்கோள்களை இந்தியா அனுப்புவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன், கடந்த 2009-இல் ரிசாட் - 2 செயற்கைக்கோளும், 2012-இல் ரிசாட் - 1 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன.
புவிப் பரப்பை துல்லியமாகப் படம் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட அந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் கண்காணிப்பு பயன்பாட்டுக்கானவை. 
அந்த வரிசையில்தான் தற்போது ரிசாட் - 2 பி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதில் அதி நவீன ரேடார் தொழில்நுட்ப இமேஜிங் வசதி உள்ளது. அதற்காக 3.6 மீட்டர் ரேடியல் ஆண்டனாவுடன் அந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரவு மற்றும் பகல் வேளைகளில் மட்டுமன்றி மேகமூட்டம் அதிகமாக இருக்கும் சூழல்களிலும் கூட புவிப்பரப்பில் உள்ள வளங்களையும், நீராதாரங்களையும் துல்லியமாகப் படம் பிடிக்கும் ஆற்றல் ரிசாட் - 2 பிக்கு உண்டு.
அதைத் தாண்டி, இந்தியாவின் சர்வதேச எல்லைகளைக் கண்காணிப்பதற்கும், கடல் எல்லைகளில் பிற நாட்டு போக்குவரத்தை கண்காணிப்பதற்கும் இந்தச் செயற்கைக்கோள் பயன்படும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மைல் கல் திட்டம்: சந்திரயான் - 2
நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்படவுள்ள சந்திரயான் - 2 விண்கலத் திட்டம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் புதிய மைல் கல்லாக அமையப் போகிறது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இஸ்ரோ சார்பில் இதுவரை 353 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 47 செயற்கைக்கோள்கள் நமது நாட்டின் பயன்பாட்டுக்கானவை. மீதமுள்ளவை அனைத்தும் வெளிநாடுகளுக்காகவும் மற்றும் மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களாகும்.நாட்டின் மிக முக்கியமான விண்வெளி ஆய்வுத் திட்டமான சந்திரயான் - 2, வரும் ஜூன் 9-ஆம் தேதியிலிருந்து 16-ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவில் சந்திரயான் விண்கலம் ஆய்வுப் பணிகளைத் தொடங்கும். உள்நாட்டு தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் கொண்டே இந்திய ராக்கெட்டுகளும், செயற்கைக்கோள்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. 
அந்த வரிசையில் சந்திரயானுக்குப் பிறகு  கார்ட்டோசாட் செயற்கைகோள் திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது. அதைத் தவிர, சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com