சுடச்சுட

  

  என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கிறேன்: மோடி உறுதி

  By DIN  |   Published on : 24th May 2019 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bjp-3

  எனது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், என்  உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் இந்த நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

  மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து, தில்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

  மாலையில் தேசியத் தலைவர் அமித் ஷா அங்கு வந்தார். அவரைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் அங்கு வந்தார். அவரை அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

  அதைத் தொடர்ந்து, வெற்றிக் களிப்பில் இருந்த தொண்டர்கள் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி, தேசியவாதத்துக்கு கிடைத்த வெற்றி என்று அமித் ஷா கூறினார்.

  அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

  மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதும், மக்கள் அனைவரும் மோடி, மோடி என்று முழக்கமிடுகிறார்கள். இது, எனக்கு கிடைத்த வெற்றி அல்ல. நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்களின் எதிர்பார்ப்புக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி. 21-ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை அனைத்து பாஜக எம்.பி.க்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் பணிவுடன் மக்களுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

  தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த தேர்தலில் பாரதத் தாய்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் பாடுபட்டுள்ளனர்.  மக்களவைத் தேர்தலில் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு அரசியல் பண்டிதர்கள் தங்களுடைய சிந்தனையை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.

  நாட்டின் இப்போது இரண்டு ஜாதிகள்தான் உள்ளன. ஒன்று ஏழை ஜாதி. மற்றொன்று, ஏழ்மை நிலையை அழிக்க விரும்பும் ஜாதி.

  நாட்டின் எதிர்காலத்தை என் கைகளில் ஒப்படைத்திருக்கிறீர்கள். எனக்கு மிகப்பெரிய பொறுப்பை அளித்திருக்கிறீர்கள். எந்தவொரு காரியத்தையும் எனது சுயநலத்துக்காக செய்ய மாட்டேன். பணிகளைச் செய்யும்போது அதில் சில தவறுகள் நேரிடலாம். ஆனால், தீய நோக்கத்துடன் எந்தவொரு காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். என் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், எனது உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

  ஒரு காலத்தில் பாஜகவுக்கு 2 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இருந்தாலும், நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. எங்கள் கொள்கைகளை மறந்துவிடவில்லை; எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுத்ததும் இல்லை. சோர்வடைந்து பாதியில் நின்றுவிடவுமில்லை. 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.

  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக அளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்திருப்பது இதுவே முதல் முறை. அதுவும் 40-42 டிகிரி வெயிலில். இதற்காக, 130 கோடி மக்களுக்கும் தலை வணங்க கடமைப்பட்டுள்ளேன். இதுவரை இல்லாத அளவில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்காக, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றார் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai