சுடச்சுட

  

  சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்: யோகி ஆதித்யநாத்

  By DIN  |   Published on : 24th May 2019 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogi adityanath

  மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் ஒதுக்கி விட்டார்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
  80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
  எனினும், இந்த மகாகூட்டணியையும் தாண்டி, உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 
  உத்தரப் பிரதேசத்தில் ஜாதி வாக்குகளை நம்பி, சந்தர்ப்பத்துக்காக அமைத்த மகா கூட்டணியை எச்சரிக்கையுடன் மக்கள் நிராகரித்து விட்டார்கள். வாரிசு அரசியல், எதிர்மறை அரசியல், ஜாதி அரசியல் ஆகியவற்றை நாடு முழுவதும் உள்ள மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.  
  தேசியவாதத்தையும், வளர்ச்சியையும் முன்னிறுத்திய பாஜகவை மக்கள் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டார்கள். இந்த இமாலய வெற்றிக்கு மோடி, அமித் ஷா, கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களுமே முக்கிய காரணம். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். 
  கடந்த 5 ஆண்டுகளில், மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா உலக அரங்கில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் இந்தியா திறம்பட செயல்பட்டது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் பலனே இந்த வெற்றி. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றதும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் மேலும் அக்கறை செலுத்தப்படும்.
  இந்த மக்களவைத் தேர்தலில், பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து மட்டுமே நாங்கள் பிரசாரம் செய்தோம். ஆனால் எதிர்க்கட்சிகள் ஜாதியையும், எதிர்மறை அரசியலையும் மையமாக கொண்டு பிரசாரம் செய்தன. அதனால்தான் இத்தகைய தோல்வியை தழுவியுள்ளனர். இப்போதாவது எதிர்மறை அரசியலை எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போது மட்டும் பிரியங்கா உரக்க பேசுகிறார். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் ஒரு முறையும் காங்கிரஸ் வென்றதில்லை என்று கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai