சுடச்சுட

  

  பிரதமர் மோடிக்கு ராஜ்நாத், சுஷ்மா உள்ளிட்டோர் வாழ்த்து

  By DIN  |   Published on : 24th May 2019 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rajnath

  கோப்புப்படம்

  மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியடைந்து, மீண்டும் ஆட்சியை பிடித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

  நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
  இதற்கு வாழ்த்து தெரிவித்து ராஜ்நாத் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "பாஜக தலைவர் அமித் ஷாவின் வெற்றிகர திட்டங்களினாலும், பிரதமர் மோடியின் புத்திசாலித்தனமான தலைமையினாலும், லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களின் கடின உழைப்பாலும் மக்களவைத் தேர்தலில் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது. புதிய இந்தியாவை கட்டமைக்க மோடி தலைமையிலான அரசு தயாராகி விட்டது. அமித் ஷாவுக்கும், மோடிக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
  அமோக வெற்றி..: இதனிடையே, பாஜகவின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட்டு சுஷ்மா ஸ்வராஜ் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு மிக்க நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
  ஃபட்னவீஸ் வாழ்த்து..: மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியடைந்ததற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜகவின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் ஃபட்னவீஸ் கூறுகையில், " கடந்த 2014-ஆம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசியது. 
  ஆனால் இந்த முறை மோடி அலை, சுனாமியாக உருவெடுத்துள்ளது' என்றார். முன்னதாக,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு தொலைபேசி மூலமாக ஃபட்னவீஸ் வாழ்த்து தெரிவித்தார்.
  வசுந்தரா ராஜே நன்றி..: தொலைநோக்கு பார்வையுடைய அமித் ஷா மற்றும் மோடி போன்ற தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து பாஜகவுக்கு வாக்களித்த ராஜஸ்தான் மக்களுக்கு நன்றி என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.
  மக்களவைத் தேர்தலில்  ராஜஸ்தானில் பாஜக அமோக வெற்றிபெற்றதையடுத்து செய்தியாளர்களிடம் வசுந்தரா ராஜே பேசுகையில், "பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் தலைமையில் பாஜக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மக்களுக்கு என் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai