சுடச்சுட

  

  மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சியை அடையாளம் காட்டிய தலைநகர்!

  By DIN  |   Published on : 24th May 2019 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலைப் பொருத்தமட்டில், தில்லியில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற கடந்த கால வரலாறு 17-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 
  தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தற்போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், தேசிய அளவில் அக்கட்சி கடந்த தேர்தலைவிட  அதிக இடங்களைப் பெற்றுள்ளது. 
  தில்லியில் அதிக இடங்களில் வெற்றி பெறும் தேசியக் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்கும் போக்கு கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற 4 மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்டிருந்தது. அதாவது, 1996-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் தில்லியில் அதிக இடங்களைப் பெற்ற கட்சிதான்,  மத்தியில் ஆட்சி அமைத்திருந்தது. 
  2014 மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்ற பாஜக, மத்தியில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. அதற்கு முந்தைய 2009-ஆம் ஆண்டு தேர்தலில் தில்லியில் ஏழு இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது அக்கட்சி தலைமையில் மத்தியிலும் ஆட்சி அமைந்தது. 
  அதேபோன்று, 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள ஏழு இடங்களில் 6-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜகவுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. அப்போதும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனால், தற்போது நடந்து முடிந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலிலும் தில்லியில் வெற்றிபெறும் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு தில்லி அரசியல் வட்டாரத்தில் காணப்பட்டது. 
  அதை நிரூபிக்கும் வகையில், வியாழக்கிழமை வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகள் இருந்தன.  தில்லியில்  ஏழு தொகுதிகளிலிலும் பாஜக  வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், தேசிய அளவிலும் அக்கட்சி அதிக இடங்கள் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும் பலத்தைப் பெற்றுள்ளது. 
  கடந்த தேர்தலைவிட தற்போது  அக்கட்சிக்கு தேசிய அளவில் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.  இது ஒருபுறமிருக்க, தில்லி தேர்தலில் கடந்த முறையைக் காட்டிலும், இந்த முறை கூடுதல் வாக்கு சதவீதத்தை பாஜக பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai