சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையரின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு 

புது தில்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை மறைத்துவிட்டதாகவும் சிபிஐ குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.

இதையடுத்து, சிபிஐயின் விசாரணைக்கு ஒத்துழைக்க ராஜீவ் குமாருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்றம், அவரைக் கைது செய்யத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், ராஜீவ் குமாரைக் கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவைக் கடந்த 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றது. மேலும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெறுவதற்காக அவரைக் கைது செய்ய 7 நாள்கள் தடை விதித்திருந்தது.

ஆனால், மேற்கு வங்கத்தில் வழக்குரைஞர்கள் அனைவரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ராஜீவ் குமார் முன்ஜாமீன் பெறுவதில் பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில், அவரைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடை வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வருவதால், அத்தடையை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரியிருந்தார்.

ஆனால், அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், தன்னைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கக் கோரி புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம். ஆர். ஷா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. 

அப்போது நீதிபதிகள், ""அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய அனைத்து மனுக்கள் மீதும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும்'' என்றனர்.

இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது

இந்த மனுவானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்த கருத்துகளாவன:

ராஜீவ் குமாரின் மனு விசாரணைக்கு ஏற்கத் தகுந்தது அல்ல. எனவே நாங்கள் எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வழக்கறிஞர்கள்போரட்டத்தால் பாதிக்கப்படாத மேற்கு வங்க நீதிமன்றம் எதையாவது அணுகுங்கள். முன்னரே தெரிவித்திருந்தபடி இந்த வழக்கானது தலைமை நீதிபதி அமர்வில் மட்டும்தான் விசாரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com