நம்பிக்கையான கூட்டணியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன: டி.ராஜா

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியது போல, பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையான கூட்டணியை ஏற்படுத்தாமல் போனதுதான் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று இந்திய
நம்பிக்கையான கூட்டணியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன: டி.ராஜா

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியது போல, பிற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையான கூட்டணியை ஏற்படுத்தாமல் போனதுதான் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தெரிவித்தார். 
17-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக பாஜக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
இந்நிலையில், இத்தேர்தல் முடிவுகள் குறித்து தில்லியில் டி.ராஜா எம்.பி. "தினமணி'யிடம் கூறியதாவது: 
தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 
மற்றொருபுறம், மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களுக்கு நம்பகத் தன்மை அளிக்கக் கூடிய வகையிலான மாற்றத்தை முன்வைக்காமல் போனதன் தோல்வியையும் இது காட்டுகிறது. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு தொலைநோக்குடன் எல்லா மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளையும் அரவணைத்து ஓர் அணியை உருவாக்கினார். அது  மட்டுமின்றி, அவரவருக்கு யதார்த்த முறையில் தொகுதிகள் பங்கீடு செய்து அணி உருவாக்கப்பட்டது. 
அதன் காரணமாக அந்த அணி மக்கள் நம்பிக்கையையும், வாக்குகளையும் பெற்று பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளது. இதுபோன்று பிற மாநிலங்களில் நம்பிக்கையான கூட்டணியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் தவறியதுதான்  பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
மேலும், பாஜகவுக்கு எதிரான ஓர் அணிச் சேர்க்கையும்,  ஒன்றுபட்ட போராட்டமும் மற்ற மாநிலங்களில் இல்லாமல் போனது. இம்மாதிரி சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தாக்கத்தை மக்கள் மீது திணித்து, மக்களை உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்பினார். 
தேசியவாதம், தேசப் பாதுகாப்பு என்ற விஷயங்களைப் பேசி மக்களின் சிந்தனைகளை தன்பக்கம் இழுத்துக் கொண்டார். இந்நிலையானது, ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள இந்தியக் குடியரசை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில்,  மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக  மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்பட்சத்தில், அக்கட்சியின் இந்துத்துவா கொள்கையை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இதுபற்றி ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் டி.ராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com