மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் முதல்வர் கமல்நாத் வெற்றி: எம்.பி. ஆனார் கமல்நாத் மகன்

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், சிந்த்வாரா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 25,837 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் முதல்வர் கமல்நாத் வெற்றி: எம்.பி. ஆனார் கமல்நாத் மகன்

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், சிந்த்வாரா சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 25,837 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
கடந்த 2018ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. மாநிலத்தின் முதல்வராக யாரை நியமிப்பது என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சுரேஷ் பச்செளரி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ராகுல் காந்தியின் அபிமானம் பெற்றவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்நாத் அந்த மாநிலத்தின் முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். 
எம்எல்ஏ பொறுப்பில் இல்லாததால், முதல்வர் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் எம்எல்ஏவாக வேண்டும் என்ற விதியின்படி, இம்முறை மக்களவை தேர்தலுடன், தனது சொந்த தொகுதியான சிந்த்வாரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிட்டார். இப்போட்டியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட, பாஜகவை சேர்ந்த விவேக் சாஹுவை 25,837 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்நாத் வெற்றி பெற்றார். 
எம்.பி.ஆனார் கமல்நாத் மகன்:  சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முதன்முறையாக போட்டியிட்ட கமல்நாத்தின் மகன் நகுல்நாத்தும் வெற்றி பெற்றார். 
சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் 1980ஆம் ஆண்டு முதல் 9 முறை போட்டியிட்ட கமல்நாத், 1997ஆம் ஆண்டு இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மட்டும் பாஜக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான சுந்தர்லால் பட்வாவிடம் மட்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவினார். கடந்த 2014ஆம் ஆண்டிலும், இதே தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார் கமல்நாத். இந்நிலையில், தனது சொந்தத் தொகுதியில் போட்டியிட வைத்த கமல்நாத், தற்போது அவரை எம்.பி.யாக்கவும் உறுதுணையாக இருந்துள்ளார். 
காங்கிரஸ் எம்.பி.யாக நகுல்நாத் வெற்றி பெற்ற போதிலும், மத்தியப் பிரதேசத்தில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருப்பது காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்ற வெற்றியுடன் ஒப்பிடும்போது, தற்போதைய காங்கிரஸின் வெற்றி அக்கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
தற்போது வெளியாகியுள்ள, மத்தியப் பிரதேச மக்களவைத் தேர்தல் முடிவுகள் கமல்நாத் அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பாஜக தலைவர் ராகேஷ் சிங் கூறுகையில், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
மத்தியப் பிரதேசத்தில், ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசுக்கு, பகுஜன் சமாஜ கட்சி மற்றும் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களின் ஆதரவுடனும், 4 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடனும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com