மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: சீதாராம் யெச்சூரி

:மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தாம் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் படுதோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: சீதாராம் யெச்சூரி

மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தாம் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். 
இதுகுறித்து தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: 
மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் பின்னடவைச் சந்தித்துள்ளது. தோல்விக்கான காரணங்கள்  குறித்து ஆராய்ந்து அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு அளித்தோருக்கும், கட்சியின் கொள்கைகளை தேர்தலில் கொண்டு சென்றவர்களுக்கும் அரசியல் தலைமைக் குழு நன்றி செலுத்துகிறது. 
நமது மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசையும், அரசியலமைப்பு அடிப்படையிலான அமைப்புகளையும், மக்கள் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதில் கடுமையான சவால்கள் முன் உள்ளன. இந்தச் சவால்களை எதிர்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் மக்கள் முன் வர வேண்டும். 
மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியை ஆராய வேண்டியுள்ளது. இது தொடர்பான கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம் வரும் 26, 27 ஆகிய தேதிகளிலும், கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஜூன் 7 முதல் 9 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.  
மேற்கு வங்கத்தில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை பொருத்த வரையில், விரிவாக ஆராயாமல் எதுவும் கூற இயலாது. தமிழகத்தில் திமுக தலைமையிலான  கூட்டணி வெற்றிக் கூட்டணியாக மாறியுள்ளது. இதுபோன்ற கூட்டணியை மற்ற மாநிலங்களில் அமைக்க முடியாத  விவகாரம் குறித்தும் அரசியல் தலைமைக் குழு, மத்தியக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் சீதாராம் யெச்சூரி. 
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 1952-ஆம் ஆண்டுக்குப் பிறகு இடதுசாரிக் கட்சிகளுக்கு கிடைத்த மிகப் பெரிய பின்னடைவாக இந்த மக்களவைத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com