சுடச்சுட

  
  bjp-19

  மக்களவைத் தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி 64 இடங்களில் வென்றுள்ளது. கடந்த தேர்தலில் அங்கு பாஜகவுக்கு 71 தொகுதிகள் கிடைத்தது. எனினும், இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜவாதி இணைந்து மகா கூட்டணி அமைந்ததால், பாஜகவுக்கு கடும் பின்னடவை ஏற்படும் என்று கூறப்பட்டது. எனினும், அதனைச் சமாளித்து பாஜக கூட்டணி 64 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
  இதில் பாஜக 62 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான அப்னா தளம் இரு தொகுதிகளிலும் வென்றுள்ளது. அதே நேரத்தில் மகா கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்களும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்களும் கிடைத்தன. 
  அக்கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.  இந்த இரு அணிகளும் இல்லாமல் மாநில முழுவதும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதுவும் சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட தனது அமேதி தொகுதியில், பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சியின் பலம் இரண்டில் இருந்து ஒன்றாகக் குறைந்துவிட்டது.
  உத்தரப் பிரதேசத்தின் மற்றொரு நட்சத்திர வேட்பாளரான பிரதமர் மோடி 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
  கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் மோடி 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்தத் தேர்தலில் கூடுதலாக மேலும் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
  கடந்த முறை தனித்துப் போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை கூட்டணி பலத்தால் 10 தொகுதிகளை வென்றது. அதே நேரத்தில் சமாஜவாதிக்கு எந்த வகையிலும் கூட்டணி கைகொடுக்கவில்லை. கடந்த முறைபோல இப்போதும் 5 தொகுதிகளில் மட்டும் அக்கட்சி வென்றுள்ளது.
  கடந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 17 தனித் தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றியிருந்தது. இந்த முறை கடும் போட்டிக்கு நடுவிலும் 15 தனித் தொகுதிகளை அக்கூட்டணி தக்கவைத்துக் கொண்டது. தலித் மக்களின் கட்சியாக முன்னிலைப்படுத்தப்படும் பகுஜன் சமாஜ் கட்சி இரு தனித் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai