சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பணக்கார வேட்பாளர்களில் வெறும் 5 பேரே வெற்றி பெற்றுள்ளனர். போட்டியிட்ட வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரரான ரமேஷ் குமார் சர்மா, டெபாசிட் கூட பெற முடியாமல் தோல்வியைத் தழுவினார்.
  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் முதல் 10 பணக்கார வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலவரம் தெரிய வந்துள்ளது. அந்த பட்டியலில் ஆந்திரத்தில் 3 பேரும், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 2 பேரும், தமிழகம், கர்நாடகம், தெலங்கானாவில் தலா ஒருவரும் இடம் பெற்றனர்.
  பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரமேஷ் குமார் சர்மா, பிகார் மாநிலம், பாடலிபுத்திரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவரது சொத்துமதிப்பு ரூ. 1, 107 கோடியாகும். ஆனால் அவருக்கு வெறும் 1, 556 வாக்குகளே கிடைத்துள்ளன.
  அப்பல்லோ குழும நிறுவனரின் மருமகனும், 2-ஆவது பணக்கார வேட்பாளருமான விஷ்வேஸ்வர் ரெட்டி தெலங்கானாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவருக்கும், தெலங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) கட்சி வேட்பாளருக்கும் கடைசி சுற்று வரை கடும் போட்டி நிலவியது. எனினும் இறுதியில் டிஆர்எஸ் கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார்.
  பட்டியலில் 5-ஆவது இடத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளரிடம் 1. 25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
  வெற்றி பெற்ற பணக்கார வேட்பாளர்கள்..: பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் 4-ஆவது இடத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார், சுமார் 2. 60 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அந்த பட்டியலில் 8-ஆவது இடத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் டி.கே. சுரேஷ், கர்நாடகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத்  மகன் நகுல் நாத் வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார். ஆந்திரத்தில் இருந்து பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai