சுடச்சுட

  

  முதன்முறையாக அதிக பெண் உறுப்பினர்களைப் பெற்ற நாடாளுமன்றம்!

  By Raghavendran  |   Published on : 25th May 2019 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Women_Lawmakers

   

  நாட்டிலேயே அதிக பெண் உறுப்பினர்களை நாடாளுமன்றம் பெற்றிருப்பது இதுவே முதன்முறையாகும். 

  17-ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 78 பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர். இத்தனை பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதன்முறையாகும். 

  இந்த தேர்தலில் மொத்தம் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 54 பேருக்கு வாய்ப்பளித்தது. அடுத்த இடத்தில் இடம்பெற்ற பாஜக 53 பெண் வேட்பாளர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. 

  பகுஜன் சமாஜ் 24, திரிணமூல் காங்கிரஸ் 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10, இந்திய கம்யூனிஸ்ட் 4 பெண் உறுப்பினர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. 222 பெண் வேட்பாளர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர்.

  உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 104 பெண்கள் போட்டியிட்டனர். அதையடுத்து தமிழகத்தில் 64 பெண்களும், பிகாரில் 55 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பெண்களும் போட்டியிட்டனர்.இவர்களில் 2019 மக்களவைத் தேர்தலில் 78 பேர் வெற்றிபெற்றுள்ளனர். 

  காங்கிரஸ் தலைவர் ராகுலை அவரது சொந்த தொகுதியில் வீழ்த்திய ஸ்மிருதி இரானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, நடிகை ஹேமமாலினி, கிர்ரன் கேர் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். போபால் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை தோற்கடித்து சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யா சிங் தாகூர் நாடாளுமன்றம் செல்கிறார்.

  அதுமட்டுமல்லாமல் பாஜக-வின் மூத்த பெண் தலைவரான ரிதா பகுனா, திமுக மகளிர் அணித் தலைவர் கனிமொழி, வங்காள நடிகை லாகேட் சாட்டர்ஜி உள்ளிட்ட வேட்பாளர்களும் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.

  நடப்பு எம்.பி.யாக இந்த தேர்தலைச் சந்தித்த 41 பேரில் 27 பேர் மீண்டும் தேர்வாகி தங்கள் வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 11 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

  முதல் இரு மக்களவையில் 24 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். 3-ஆவது மக்களவையில் 37 பேர் இடம்பெற்றனர். 8-ஆவது மக்களவையில் 45 பேரும், 9-ஆவது மக்களவையில் 28 பேரும், 10-ஆவது மக்களவையில் 42 பேரும் தேர்வாகியிருந்தனர்.

  11-ஆவது மக்களவையில் 41 பேரும், 12-ஆவது மக்களவையில் 44 பேரும், 13-ஆவது மக்களவையில் 52 பேரும், 14-ஆவது மக்களவையில் 52 பெண் வேட்பாளர்களும் வெற்றிபெற்றிருந்தனர்.

  15-ஆவது மக்களவையில் 52 பேரும், 16-ஆவது மக்களவையில் 64 பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், 1952-ல் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் முதன்முறையாக 17-ஆவது மக்களவையில் 14 சதவீதம் (78) உறுப்பினர்கள் அதிகபட்சமாக வெற்றிபெற்றுள்ளனர். 

  இந்நிலையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா இன்னும் நிறைவேறாமல் கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai