சூரத் நகரில் கட்டடத்தில் தீ விபத்து 20 மாணவர்கள் பலி

குஜராத் மாநிலம், சூரத் நகரில் வணிக வளாகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் உயிரிழந்தனர்.
சூரத் நகரில் கட்டடத்தில் தீ விபத்து 20 மாணவர்கள் பலி

குஜராத் மாநிலம், சூரத் நகரில் வணிக வளாகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் உயிரிழந்தனர்.
சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள 4 மாடி வணிக வளாகத்தில் தனியார் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டம் சூழ்ந்ததால், பயிற்சி மையத்தில் இருந்த மாணவர்கள், உயிர் பிழைப்பதற்காக, ஜன்னல்கள் வழியாக மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தனர்.
தகவல் அறிந்து 19 தீயணைப்பு வண்டிகள், 2 மீட்பு ஏணி வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்த தீயணைப்புப் படையினர், மாடியில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரவும் போராடினர். இந்த விபத்தில் மாடியில் இருந்து குதித்து பலத்த காயமடைந்ததாலும், புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் உள்பட்டவர்கள். சில மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக் கொண்டு வரப்பட்டது. கட்டடத்தில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
ரூ.4 லட்சம் நிவாரணம்: இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் ரூபானி அறிவித்தார். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்துமாறு நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் நிதின் படேல் கூறினார். விபத்துக்கு காரணமானவர்கள் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் இரங்கல்: தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு குஜராத் மாநில அரசையும், உள்ளாட்சி நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com