மக்களவையில் முதல் முறையாக 78 பெண் எம்.பி.க்கள்..!

நாட்டின் 17-ஆவது மக்களவையில் இதுவரை இல்லாத அளவு பெண்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. வரலாற்று சாதனையாக, இந்த முறை 78 பெண் எம்.பி.க்கள் மக்களவையில் கால் பதிக்கின்றனர்.
மக்களவையில் முதல் முறையாக 78 பெண் எம்.பி.க்கள்..!

நாட்டின் 17-ஆவது மக்களவையில் இதுவரை இல்லாத அளவு பெண்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது. வரலாற்று சாதனையாக, இந்த முறை 78 பெண் எம்.பி.க்கள் மக்களவையில் கால் பதிக்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இந்த தொகுதிகளில் தேர்தல் களம் கண்ட 724 பெண் வேட்பாளர்களில், 78 பேர் வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளனர்.

மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகள் என்று வரும்போது மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டும், மக்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில், 17-ஆவது மக்களவைக்கு 14 சதவீத பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 11 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போதைய பெண் எம்.பி.க்களில் 41 பேர் மீண்டும் போட்டியிட்ட நிலையில், அவர்களில் 27 பேரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கடந்த 1952-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் வெறும் 24 பெண் எம்.பி.க்களே இருந்தனர். 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 52 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்(16-ஆவது மக்களவை) 64 பெண்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை ஒப்பிடும்போது, இந்த முறை பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்றது வரலாற்று சாதனையாகும்.

பெண் வேட்பாளர்களை களமிறக்கிய கட்சிகள்..: இந்த முறை ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டிக் கொண்டு பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. காங்கிரஸ் சார்பில் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களும், பாஜக சார்பில் 53 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 23 பேரும், பகுஜன்சமாஜ் சார்பில் 24 பெண்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 பெண் வேட்பாளர்களும் தேர்தல் களம் கண்டனர். அதுமட்டுமன்றி, சுயேச்சையாக 222 பெண்கள் போட்டியிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 104 பெண்கள் போட்டியிட்டனர். அதையடுத்து தமிழகத்தில் 64 பெண்களும், பிகாரில் 55 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பெண்களும் போட்டியிட்டனர்.

தோல்வியடைந்த மூன்றாம் பாலினத்தவர்..: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 4 பேர் சுயேச்சையாக போட்டியிட்டனர். மூன்றாம் பாலினத்தவரை வேட்பாளராக நிறுத்திய ஒரே கட்சி ஆம் ஆத்மியாக இருந்த போதிலும், போட்டியிட்ட அனைத்து மூன்றாம் பாலினத்தவரும் தேர்தலில் தோல்வியை தழுவினர்.


மக்களவையில் 27 முஸ்லிம் எம்.பி.க்கள்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 27 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் மக்களவையில் முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. 

நாட்டு மக்கள்தொகையில் முஸ்லிம் மக்கள் சுமார் 20 சதவீதம் பேர் உள்ளனர். 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் முறையே 30 மற்றும் 34 முஸ்லிம் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது, இந்த எண்ணிக்கை 23-ஆக குறைந்தது. இந்நிலையில், இந்த முறை மீண்டும் முஸ்லிம் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 6 முஸ்லிம் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கேரளம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

1952-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் வெறும் 11 முஸ்லிம் எம்.பி.க்களே இருந்தனர். மக்களவையில் கடந்த 1980-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 49 முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com