மம்தாவின் புதிய கவலை?: மேற்கு வங்கத்தில் முன்னேறும் பாஜக

மம்தாவின் புதிய கவலை?: மேற்கு வங்கத்தில் முன்னேறும் பாஜக

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது மட்டுமன்றி, மேற்கு வங்கத்தில் அந்த வெற்றியை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.


மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது மட்டுமன்றி, மேற்கு வங்கத்தில் அந்த வெற்றியை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. இது, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றியிருப்பதுதான் மம்தாவின் இந்தக் கவலைக்கு காரணம். 

கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் காலடி வைத்தது பாஜக. அப்போதிருந்து, மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத வெற்றியைப் பெற வேண்டும் என்பது பாஜக தலைவர்களின் லட்சியமாக இருந்தது. அதற்காக, அவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதன் பலனாக, நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது அக்கட்சி. இதை வேறு மாதிரி கணக்கிட்டால், தற்போது வெற்றி பெற்றுள்ள 18 மக்களவைத் தொகுதிகளில், 129 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இந்த வெற்றி, 129 பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதற்குச் சமமாகும். மொத்தம் 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆட்சியமைப்பதற்கு 148 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தற்போது 129 தொகுதிகளில் வெற்றியை உறுதிசெய்துள்ள பாஜக, அந்த மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு இன்னும் 19 இடங்கள்தான் தேவை.

மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அது மம்தாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அது போதாததற்கு, திரிணமூல் காங்கிரஸ் விரைவில் அஸ்தமனமாகும் என்று ஆரூடம் கூறியிருக்கிறார் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் முகுல் ராய். இவர், வேறு யாருமல்ல, திரிணமூல் காங்கிரஸின் நிறுவன உறுப்பினர்; ஒரு காலத்தில் மம்தாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். "" இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள், இன்னும் சில மாதங்களில் திரிணமூல் காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். இதற்காகவே நான் பாஜகவில் இணைந்தேன்'' என்றும் சவால் விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி, மம்தாவுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தும் விதமாக, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு, மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது 40 எம்எல்ஏக்கள், பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக, முகுல் ராயின் மகன் சுப்ரங்சு, திரிணமூல் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கட்சிக்காக கடினமாக உழைத்தாலும், அதற்கான நற்பெயர் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவர், தற்போது தனது தந்தையை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார்.

பாஜகவின் அடுத்தடுத்த முயற்சிகளைப் பார்த்தால், வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸூக்கு வலுவான போட்டியை பாஜக கொடுக்கும் என்று தெரிகிறது.

இடதுசாரியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் 2011-இல் கைப்பற்றினார் சாதனை படைத்தார் மம்தா பானர்ஜி. தற்போது, அவரிடம் புதிய கவலை குடிகொண்டுள்ளது. அது, 2021-இல் பாஜகவை எதிர்கொள்வது எப்படி என்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com