முதல்வர் குமாரசாமியின் தலைமை மீது கூட்டணி அமைச்சரவை நம்பிக்கை

முதல்வர் குமாரசாமியின் தலைமை மீது கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை முழு நம்பிக்கை வைத்துள்ளது என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
முதல்வர் குமாரசாமியின் தலைமை மீது கூட்டணி அமைச்சரவை நம்பிக்கை

முதல்வர் குமாரசாமியின் தலைமை மீது கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை முழு நம்பிக்கை வைத்துள்ளது என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மக்களவைத் தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு, படுதோல்வி அடைந்துள்ளன. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பாஜக வென்று சாதனை படைத்துள்ளது. இது கர்நாடக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சாதனையாகும்.
மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா போன்ற பெரும் தலைவர்கள் தோல்வி அடைந்தது மஜத, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்தச் சூழ்நிலையில்,  மஜத-காங்கிரஸ் கூட்டணி உடைந்து மாநில அரசு கவிழுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், பெங்களூரு, கிருஷ்ணா அரசினர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் அதிகாரப்பூர்வமற்ற அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், அமைச்சர்கள் ஆர்.வி.தேஷ்பாண்டே, எம்.பி.பாட்டீல் உள்ளிட்ட காங்கிரஸ், மஜத அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தோல்விக்கான காரணம் குறித்து கூட்டத்தில் ஆராய்ந்ததோடு, கூட்டணி ஆட்சியைத் தொடரவும் முடிவு செய்யப்பட்டது.  தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய முதல்வர் குமாரசாமி விருப்பத்தை வெளிப்படுத்தியதோடு, அப் பதவியை காங்கிரஸூக்கு விட்டுக் கொடுக்கும் முடிவையும் தெரிவித்தார்.  இதை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் அமைச்சர்கள், இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் முடிவெடுக்க வேண்டுமென்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்தபடியே ராகுல் காந்தியை தொலைபேசியில் அழைத்தனர். அப்போது, அடுத்த 4 ஆண்டுகளுக்கு முதல்வராக குமாரசாமியே தொடர வேண்டுமென்று ராகுல் காந்தி கூறியதை தொடர்ந்து,  முடிவு கைவிடப்பட்டது. முதல்வர் குமாரசாமியின் தலைமையில் நம்பிக்கை வைத்துள்ளதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக் கூட்டத்தின் முடிவில் துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, கர்நாடகத்தில் கூட்டணிக் கட்சிகள் அடைந்த தோல்விகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மத்திய அரசுக்கானதே தவிர, மாநில அரசுக்கானது அல்ல. அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் குமாரசாமியின் தலைமை மீது கூட்டணி அமைச்சரவை முழு நம்பிக்கை உள்ளதை கூட்டம் உறுதி செய்தது.  அனைத்து எம்எல்ஏக்களும் கட்சித் தலைமையின் கட்டுக்குள் இருக்கிறார்கள்.  மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அடுத்த 4 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்கும். கூட்டணி அரசை கவிழ்க்க மேற்கொள்ள துடிக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிப்போம். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாட்சியைத் தருவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com