Enable Javscript for better performance
புதிய இந்தியாவை உருவாக்கப் புதிய பயணம்- Dinamani

சுடச்சுட

  

  புதிய இந்தியாவை உருவாக்கப் புதிய பயணம்: நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 26th May 2019 05:27 AM  |   அ+அ அ-   |    |  

  modi

  "புதிய இந்தியாவை உருவாக்கப் புதிய உத்வேகத்துடன் புதிய பயணத்தை தொடங்குவோம்' என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், மக்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டாமல் அவர்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று கூட்டணி எம்.பி.க்களை அவர் கேட்டுக் கொண்டார்.
  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதில், பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது.
  மீண்டும் பிரதமராக தேர்வு: இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம், தில்லி நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. பின்னர், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வரவேற்புரையாற்றினார். அதன் பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தலைவர் பதவிக்கு (பிரதமர்) மோடியின் பெயரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்மொழிந்தார். அதனை, பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். பின்னர், புதிய எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார். 
  இக்கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
  அத்வானி, ஜோஷியிடம் ஆசி: பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட பின்னர், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி, 75 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது, கடந்த 1857-இல் நிகழ்ந்த சிப்பாய் கலகத்தை குறிப்பிட்டு பேசிய அவர், "அந்த போராட்டத்துக்கு பிறகு, சுதந்திரத்துக்காக அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்தனர். 2022-இல் நமது நாடு 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் சூழலில், நல்ல நிர்வாகத்துக்காக மக்களிடையே ஒற்றுமையுணர்வு ஓங்க வேண்டும்' என்றார். அவர் மேலும் பேசியதாவது: எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருப்போம். அதேபோல், நாங்கள் யாருடைய நம்பிக்கையை பெற வேண்டுமோ, அவர்களுக்காகவும் பணியாற்றுவோம். 
  எதிர்க்கட்சிகள், தங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரின் வாழ்வையே அச்சத்துக்கு ஆளாக்கின.  தேர்தல் காலகட்டத்தில் சிறுபான்மையினர் தவறாக வழிநடத்தப்பட்டனர்.
  "நம்பிக்கையை வெல்ல வேண்டும்': பல ஆண்டுகளாக ஏமாற்றுப்பட்டு வந்த ஏழை மக்களை பாஜக அரசுதான் மீட்டது. இதேபோல், சிறுபான்மையினரை சுற்றி நிலவும் வஞ்சனையையும் நாம் உடைத்தெறிய வேண்டும். கல்வி, சமூக-பொருளாதார நிலைகளில் அவர்களை மேம்படுத்த வேண்டும். அவர்களது நம்பிக்கையை நாம் வெல்வது அவசியம். இந்த பெரும் பொறுப்பு, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அனைவருக்கும் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
  நமக்கு அரசமைப்புச் சட்டமே மேலானது. வீட்டில் எவ்வித வழிபாட்டை மேற்கொண்டாலும், வெளியே இந்தியத் தாயைவிட உயர்ந்த தெய்வம் நமக்கு கிடையாது. இதேபோல், இந்நாட்டின் 130 கோடி மக்களும் 130 கோடி கடவுள்கள்தாம்.
  நாட்டு மக்களை ஒன்றிணைத்த தேர்தல்: பொதுவாக தேர்தல் என்பது மக்களிடையே பிளவையும், கருத்து வேறுபாடுகளையும் உருவாக்குவதாக இருக்கும். ஆனால், 2019 மக்களவைத் தேர்தல், நாட்டில் பல்வேறு சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது. இத்தேர்தலில் ஆட்சிக்கு ஆதரவான மனநிலை எதிரொலித்தது. இதன் மூலம் நேர்மறையான தீர்ப்பு கிடைத்தது. கடந்த 2014-19 காலகட்டத்தில் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தினோம். எனவே, ஏழை மக்கள்தான் இந்த அரசை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்துள்ளனர் என்று உறுதியாக கூறுவேன். தேசிய லட்சியத்துடன், பிராந்திய விருப்பங்களையும் ஒருங்கிணைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படும். 
  புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை: தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள், விஐபி கலாசாரத்தை தவிர்க்க வேண்டும். சுய விளம்பரத்துக்காக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்து வீண் சர்ச்சையில் சிக்க வேண்டாம். புதிய அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்ற ஊக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவற்றை, எம்.பி.க்கள் யாரும் நம்ப வேண்டாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்.பி.க்களின் முழு விவரத்தையும் நான் இன்னும் பரிசீலிக்கவில்லை. எனவே, நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உரிய விதிமுறைகளின்படி, எம்.பி.க்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.

  ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு

  தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில், மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் மோடி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, புதிய அரசை அமைக்க வருமாறு, அவருக்கு ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்.

  பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு மே 30-ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. எனினும், இதில் பங்கேற்கவிருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த 2014-இல் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

  kattana sevai