சுடச்சுட

  

  மேற்கு வங்கத்தில் பல இடங்களில் பாஜக-திரிணமூல் கட்சியினர் மோதல்

  By DIN  |   Published on : 26th May 2019 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  securty

  மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக  தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படையினர். நாள்: சனிக்கிழமை.

  மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த வன்முறைகளில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். 
  மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 22 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக 18 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த முறை வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, இம்முறை 18 இடங்களைக் கைப்பற்றி, தங்களது பலத்தை நிரூபித்துள்ளது.
  இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே இரு தினங்களாக மோதல் ஏற்பட்டுள்ளது. தங்களது கட்சியின் அலுவலகங்களை பாஜகவினர் சூறையாடியதாகவும், தீக்கிரையாக்கியதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
  இதுதொடர்பாக, கூச்பிகார் மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி அபெத் அலி மியா கூறுகையில், "கூச்பிகார் மாவட்டத்தில் பக்ஷிர்ஹட், ராம்பூர், ஷால்பரி உள்ளிட்ட இடங்களில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவினர் சூறையாடியதுடன், தீக்கிரையாக்கியுள்ளனர். சிடாய் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் மகளிர் அணி நிர்வாகி வீடு மீது பாஜகவினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்' என்றார்.
  கூச்பிகார் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் நிதிஷ் பிரமாணிக் வெற்றி பெற்றார். அவரது வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
  பாங்குரா மாவட்டத்தில் பாஜக வெற்றி பேரணியை வழிநடத்திய உள்ளூர் பாஜக தலைவர் வித்யூத் தாஸ் (42) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் காளி ராய் முன்னின்று இத்தாக்குதலை நடத்தியதாகவும் பாஜக கூறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக பாங்குரா மாவட்ட கண்காணிப்பாளர் கோடீஸ்வர ராவ் தெரிவித்தார்.
  வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:
  பீஜ்பூர், நைஹாட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களின் வீடுகள், கடைகளை பாஜகவினர் சூறையாடியதாக புகார்கள் வந்துள்ளன. மேலும், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், நாடியா மாவட்டத்தின் சக்தாஹா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் பாஜக தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் கொல்லப்பட்டதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் பாஜகவினர் ஈடுபட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
  ஆளுநர் வேண்டுகோள்: இதனிடையே, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai