அருணாசல் சட்டப்பேரவைத் தேர்தல்: 41 தொகுதிகளில் பாஜக வெற்றி

அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், 41 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
அருணாசல் சட்டப்பேரவைத் தேர்தல்: 41 தொகுதிகளில் பாஜக வெற்றி

அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், 41 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
அருணாசலப் பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 60 தொகுதிகளில், 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 57 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாள்கள் நடைபெற்றன.
இதில் தபோர்ஜியோ, டம்போர்ஜியோ, ராகா ஆகிய 3 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், முடிவுகள் இடம்பெற்ற ஆவணங்களை அளிக்காமல் பாதியிலேயே சென்று விட்டனர். இதனால் வாக்கு எண்ணும் பணியைத் தொடர முடியவில்லை. பிறகு, அதிகாரிகள் மீண்டும் திரும்பி  வந்து ஆவணங்களை அளித்த பிறகே, வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இதையடுத்து வாக்கு எண்ணும் பணி முடிந்து தபோர்ஜியோ தொகுதிக்கான முடிவு சனிக்கிழமை காலையிலேயே அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளர் தனிஹி சோஹி வெற்றி பெற்றார்.
இதேபோல், டம்போர்ஜியோ தொகுதியிலும் பாஜக வேட்பாளர் ரோட் புய் வெற்றி பெற்றார். ராகா தொகுதியில் தேசிய மக்கள் கட்சியின் (என்.பி.பி.) வேட்பாளர் தரின் தப்கே வெற்றி பெற்றார்.
இதேபோல், முதல்வர் பெமா காண்டு, முக்து தொகுதியிலும், துணை முதல்வர் சவ்னா மெயின் சவ்கம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். பாஜகவில் இருந்து விலகி என்.பி.பி. கட்சியில் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் குமார் வயி, பாமெங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 41 தொகுதிகளில் (போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 தொகுதிகளையும் சேர்த்து) வென்றுள்ளது. அதற்கடுத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. என்.பி.பி. கட்சி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4, அருணாசலப் பிரதேச மக்கள் கட்சி (பி.பி.ஏ.) 1 தொகுதியிலும், சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தஹம் சஞ்சோய் தோல்வியடைந்தார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தஹம் பரியோ, பாஜக வேட்பாளர் பலோ ராஜாவிடம் தோல்வியடைந்தார்.
தேர்தலில் 3 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் 3 பேரும், பாஜக வேட்பாளர்கள். இதில் 2 பேர் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருப்பவர்கள்.
தேர்தலில் வெற்றி பெற்ற 57 பேரில், 20 பேர் புதுமுகங்கள். முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக 20 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர், பாஜகவினர். 6 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள். 2 பேர், என்.பி.பி. கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர், சுயேச்சை.
அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும், என்.பி.பி. கட்சியும் போட்டியிட்டது இதுவே முதல்முறையாகும்.
மக்களுக்கு பெமா காண்டு நன்றி: தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள மக்களுக்கு முதல்வர் பெமா காண்டு நன்றி தெரிவித்துள்ளார். 
அவர் கூறுகையில், "எனது தலைமையிலான அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள மக்களுக்கு நன்றி' எனக் குறிப்பிட்டுள்ளார்.


மொத்த தொகுதிகள்    60
தேர்தல் நடைபெற்றது    57
முடிவுகள் அறிவிக்கப்பட்டது    57
பாஜக    38
ஜேடி(யு)    7
என்.பி.பி.    5
காங்கிரஸ்     4
சுயேச்சைகள்     2
பி.பி.ஏ.     1
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com