ஆட்சியமைக்க ஜெகனுக்கு ஆந்திர ஆளுநர் அழைப்பு

ஆந்திரத்தில் ஆட்சியமைக்கும்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹைதராபாதில் ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனை சனிக்கிழமை சந்தித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.
ஹைதராபாதில் ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனை சனிக்கிழமை சந்தித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திரத்தில் ஆட்சியமைக்கும்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான  வாக்குகள்  வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151இல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, விஜயவாடாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:
நம்பிக்கை, எதிர்பார்ப்பு அடிப்படையில் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். இதேபோல், 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் நமது கட்சிக்கு மக்கள்  வாக்களிக்க வேண்டும். அந்தளவுக்கு மக்கள் பணிகளை நமது கட்சி எம்எல்ஏக்கள் செய்ய வேண்டும்.
ஓராண்டுக்குள் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் என்ற பெருமை எனக்கு கிடைக்க வேண்டும். அதற்கான ஆதரவை கட்சியின் எம்எல்ஏக்கள் எனக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார் ஜெகன்மோகன் ரெட்டி.
இதையடுத்து, விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் வந்த ஜெகன்மோகன், ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனை சனிக்கிழமை மாலை சந்தித்தார். அப்போது அவரிடம், ஆட்சியமைக்க ஜெகன்மோகன் ரெட்டி உரிமை கோரினார். இதையேற்று, ஆந்திரத்தில் ஆட்சியமைக்கும்படி ஜெகனை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இதன்பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் வரும் 30ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்கும் விழா நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவையும் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார்.
மோடியை சந்திக்கிறார் ஜெகன்: இதனிடையே, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெகன்மோகன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்து பேசவுள்ளார். 
இந்த சந்திப்பின்போது, மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தருவது அல்லது பிரச்னைகளின் அடிப்படையில் மோடி அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி பேச வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com