இந்தியா "ஹிந்து தேசம்': சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்தது மேகாலய உயர்நீதிமன்றம்

இந்தியா, "ஹிந்து தேசம்' என்று தனி நீதிபதி அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை மேகாலய உயர்நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது.
இந்தியா "ஹிந்து தேசம்': சர்ச்சைக்குரிய தீர்ப்பை ரத்து செய்தது மேகாலய உயர்நீதிமன்றம்

இந்தியா, "ஹிந்து தேசம்' என்று தனி நீதிபதி அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்பை மேகாலய உயர்நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது.
மேகாலயத்தில் ஒருவருக்கு மாநில அரசு இருப்பிடச் சான்று வழங்க மறுத்த விவகாரத்தை அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த டிசம்பரில் விசாரித்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.சென் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்ததாவது:
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரித்ததால், அப்போதே இந்தியாவை ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்.
மேலும், இந்தியாவின் சட்டங்கள், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்ப்போர் யாராக இருந்தாலும், அவர்களை இந்திய குடிமக்களாகக் கருதக் கூடாது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சி இனத்தவர் உள்ளிட்டோரைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று நீதிபதி எஸ்.ஆர்.சென் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம், மேகாலய நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முகமது யாகூப் மீர் தலைமையிலான அமர்வு முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நீதிபதி எஸ்.ஆர்.சென் அளித்த தீர்ப்பு,  சட்ட ரீதியில் குறைபாடுகள் கொண்டது; அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைக்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தீர்ப்பையும் ஏற்க முடியாது. 
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளையும், நாட்டின் மதச் சார்பின்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தனி நீதிபதியின் தீர்ப்பு விலக்கி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com