ஒற்றுமை நீங்கிடில்...!

பிரதமர் கனவால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாமல் போனதன் காரணமாகவே தற்போது தோல்வி முகத்தால் துவண்டுப் போய்  உள்ளனர்.
ஒற்றுமை நீங்கிடில்...!

பிரதமர் கனவால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாமல் போனதன் காரணமாகவே தற்போது தோல்வி முகத்தால் துவண்டுப் போய் உள்ளனர்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைய விடாமல் செய்த சாதுர்யத்தின் காரணமாகவே பாஜக அமோக வெற்றி பெற்று, மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆளும்கட்சியான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில்,  அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் எண்ணமாக இருந்தது.
பாஜகவின் எண்ணத்துக்கேற்ப மக்களவைத் தேர்தல் பணிகள் தொடங்குவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, காங்கிரஸூடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது இல்லை எனும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தது. அந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பின்பற்றியது. இதை மாற்றுவதற்கு  காங்கிரஸ் எல்லா முயற்சியையும் எடுத்துப் பார்த்தது. 
தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்ற திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம்பெற்றும் கூட, தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவை காங்கிரஸால் கடைசி வரை மாற்றவே முடியவில்லை. இது காங்கிரஸூக்கு தேர்தலுக்கு முன்பே ஏற்பட்ட முதல் பின்னடைவாக முடிந்தது.
அதன் பிறகு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மூலம் இதர எதிர்க்கட்சிகளைத் திரட்டுவதற்கு காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. மேலும் தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களையும், மாநிலக் கட்சித் தலைவர்களையும் அழைத்து கூட்டங்களையும் நடத்திப் பார்த்தது. ஆனால், அதுவும் காங்கிரஸூக்குக் கைகொடுக்கவில்லை.
பிரதமர் கனவு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அதே வேளையில், சந்திரபாபு நாயுடு பிரதமர் கனவிலும் வலம் வந்தார். 
தேர்தலுக்கு முன்பு மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியபோது, "மக்களவைத் தேர்தலில்  இழுபறி நிலை வந்தால், தென்னகத்தில் இருந்துதான் ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கக்கூடிய நிலை வரும். அப்படி வரும்போது என்னை (சந்திரபாபு நாயுடு) ஆதரியுங்கள்' என்று ஸ்டாலினிடம் கோரியிருந்தார்.
ஆனால், தற்போதும் உள்ளதும் போய்விட்டது என்பதுபோல, ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியைக் கூட்டணிக்கு அழைத்துவந்துவிட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளையும் காங்கிரஸ் எடுத்தது. 
ஆனால் பிரதமர் கனவில் இருந்து வந்த மம்தா, கடைசி வரை தன் பிடியை விட்டுக் கொடுக்கவில்லை. இது காங்கிரஸூக்கு மட்டும் பின்னடவை ஏற்படுத்தவில்லை. மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கும் கூட பின்னடைவாக அமைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 34 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால், தற்போதைய மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளிலேயே முன்னிலையைப் பெற முடிந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்துப் பார்த்தது. தில்லியைத் தவிர, வேறெங்கும் கூட்டணி  அமைக்க ஆம் ஆத்மி கட்சி முன்வரவில்லை. தில்லியில் ஒரு தொகுதியைக்கூட எதிர்க்கட்சிகளால் கைப்பற்ற முடியாமல் போய், 7 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியையும், அகிலேஷ் யாதவையும் கூட்டணிக்கு காங்கிரஸ் அழைத்து பார்த்தது. 
ஆனால், பிரதமர் கனவில் இருந்த மாயாவதி அதற்குப் பிடி கொடுக்காமல், பாஜகவையும்விட காங்கிரஸை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 
தற்போது, மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில் 17 தொகுதிகளிலேயே முன்னிலை பெற முடிந்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் தோல்வி: இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கனவில் இருந்ததன் காரணமாக பலமான பாஜகவை எதிர்க்கட்சியால் நெருங்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. 
அதே நேரத்தில், தற்போதைய மக்களவைத் தேர்தல் முடிவின்படி பிரதமர் கனவில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் காங்கிரஸூடன் சேர்ந்திருந்தால்கூட பாஜகவை வீழ்த்திவிட முடியாது எனும் வகையில் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
ஒருவேளை, ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பாஜகவை எதிர்த்திருந்தால், இந்த அளவுக்குத் தோல்வியைத் தழுவக்கூடிய நிலை ஏற்பட்டிருக்காது.
ஆனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைய விடாமல் பார்த்துக் கொண்ட அதேவேளையில், பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தது, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம் மீதான தாக்குதல் உள்பட  வடமாநில மக்களின் உள்ளத்தைக் கவரும் வகையில் பாஜக பல்வேறு துல்லியத் தாக்குதலைத் தொடுத்து வெற்றியைப் பறித்துக் கொண்டது.  அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, எழுந்திருக்கவே முடியாத துயரமான நிலைக்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com