சூரத் தீ விபத்து: தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

குஜராத்தின் சூரத் நகரில் தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அந்தப் பயிற்சி மையத்தின் உரிமையாளரைக் காவல் துறையினர் கைது
தீ விபத்தில் பலியானவர்களுக்கு ஆமதாபாதில் உள்ள பள்ளி ஒன்றில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.
தீ விபத்தில் பலியானவர்களுக்கு ஆமதாபாதில் உள்ள பள்ளி ஒன்றில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய மாணவர்கள்.

குஜராத்தின் சூரத் நகரில் தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அந்தப் பயிற்சி மையத்தின் உரிமையாளரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள 4 மாடி வணிக வளாகத்தில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 மாணவர்கள் பலியாகினர். 
இந்நிலையில், தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனர். இதையடுத்து, தீ விபத்தால் பலியானோரின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்தப் பயிற்சி மையத்தின் உரிமையாளரைக் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர். 
இது தொடர்பாக, சூரத் காவல் ஆணையர் சதீஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ""தீ விபத்து தொடர்பாக, வணிக வளாக உரிமையாளர்கள் இருவர், தனியார் பயிற்சி மைய உரிமையாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளரைக் கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தொடர்ந்து தேடிவருகிறோம்'' என்றார்.
சூரத் காவல் துறை செய்தித் தொடர்பாளர் பி.எல்.செளதரி கூறுகையில், ""தீ விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 17 முதல் 18 வயதைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 18 பேர் மாணவிகள். 
இதில் 3 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். அத்தேர்வுகளுக்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் 3 பேரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஒரு மாணவி 69.39 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்'' என்றார்.
இதனிடையே, தீ விபத்து தொடர்பாக விளக்கமளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com