தேர்தல் தோல்வி குறித்து தீவிரமாக ஆராயப்படும்: தெலங்கானா ராஷ்டிர சமிதி

மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறமுடியாத காரணங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்படும் என தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தெரிவித்துள்ளது.
தேர்தல் தோல்வி குறித்து தீவிரமாக ஆராயப்படும்: தெலங்கானா ராஷ்டிர சமிதி

மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறமுடியாத காரணங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்படும் என தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் 9 தொகுதிகளை தெலங்கானா ராஷ்டிர சமிதி கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 1 தொகுதியைக் கைப்பற்றியது. பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மத்தியில் பாஜகவோ அல்லது காங்கிரúஸா தனிப்பெரும்பான்மை பெறாது என யூகித்திருந்த தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர், மாநிலத்தில் குறைந்தபட்சம் 16 தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றி பெறும் எனத் தெரிவித்து வந்தனர். ஆனால், 9 தொகுதிகளை மட்டுமே அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது. முக்கியமாக டிஆர்எஸ் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் தோல்வியடைந்தார்.
இதன் காரணமாக, கே.சந்திரசேகர் ராவ் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் சிலரிடம் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், மாநில அமைச்சர்கள் சிலர் மாற்றப்படலாம் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் பல்லா ராஜேஷ்வர் ரெட்டி கூறுகையில், ""இன்னும் சில தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றி பெறும் என்று கணித்திருந்தோம். எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான அலையும், பிற காரணங்களும் பாஜகவின் வெற்றிக்குக் காரணங்களாக இருக்கலாம்'' என்றார்.
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ""டிஆர்எஸ் கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்படும். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக 20 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் என்பதால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவளித்துள்ளனர். எனினும், டிஆர்எஸ் கட்சி 42 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி பெருவாரியாக வெற்றி பெறும்'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com