பசுப் பாதுகாவலர்களிடம் இருந்து காப்பாற்றினாலே முஸ்லிம்களின் அச்சம் முற்றிலும் நீங்கும்: அசாதுதீன் ஓவைஸி

சிறுபான்மையினரை சுற்றி நிலவும் வஞ்சனையையும் நாம் உடைத்தெறிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பசுப் பாதுகாவலர்களிடம் இருந்து காப்பாற்றினாலே முஸ்லிம்களின் அச்சம் முற்றிலும் நீங்கும்: அசாதுதீன் ஓவைஸி

புதிய இந்தியாவை உருவாக்கப் புதிய உத்வேகத்துடன் புதிய பயணத்தை தொடங்குவோம்' என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், மக்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டாமல் அவர்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று கூட்டணி எம்.பி.க்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் எதிர்க்கட்சிகள், தங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரின் வாழ்வையே அச்சத்துக்கு ஆளாக்கின.  தேர்தல் காலகட்டத்தில் சிறுபான்மையினர் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

சிறுபான்மையினரை சுற்றி நிலவும் வஞ்சனையையும் நாம் உடைத்தெறிய வேண்டும். கல்வி, சமூக-பொருளாதார நிலைகளில் அவர்களை மேம்படுத்த வேண்டும். அவர்களது நம்பிக்கையை நாம் வெல்வது அவசியம். இந்த பெரும் பொறுப்பு, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் அனைவருக்கும் உள்ளது என்று அவரது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பசுப் பாதுகாவலர்களிடம் இருந்து முதலில் முஸ்லிம்களை காத்திடுங்கள் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கூறியதாவது:

சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்க முதலில் பசுப் பாதுகாவலர்களிடம் இருந்து முஸ்லிம்களை காப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நமது ஜனநாயகம் மக்களுக்கானது, மிருகங்களுக்கானது இல்லை. இதை மட்டும் பிரதமர் உணர்ந்தாலே போதும், சிறுபான்மையினரின் அச்சம் முற்றிலும் நீங்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com