சுடச்சுட

  

  இந்தியா பயங்கரவாதிகளின் இலக்காகிவிடாமல் இருக்கவே பாலாகோட் தாக்குதல் நடத்தப்பட்டது: ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத்

  By DIN  |   Published on : 27th May 2019 02:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  salute

  கேரள மாநிலம், ஏழிமலை கடற்படை அதிகாரிகள் பயிற்சி மைய நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத்.

  பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியா இலக்காகிவிடாமல் இருப்பதை உறுதி செய்யவே பாலாகோட்டில் அதிரடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறினார். 
  கேரள மாநிலம், ஏழிமலையில் உள்ள கடற்படை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வீரர்கள் பயிற்சி முடித்த நிகழ்வில் பங்கேற்ற விபின் ராவத், பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது: 
  இந்திய எல்லைக்கு அப்பால் பயிற்சியளிக்கப்படும் பயங்கரவாதிகள், இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதை உறுதி செய்யவே பாலாகோட் அதிரடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க அரசின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. 
  தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்றவை பயங்கரவாதத்துக்கான நிதி ஆதாரத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. சுதந்திரம் பெற்றது முதல் இந்தியா பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. பாதுகாப்புப் படைகளும், அவற்றுக்கு உதவும் அமைப்புகளும் பயங்கரவாதச் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு வந்திருக்கின்றன. 
  காஷ்மீரில் அவ்வப்போது கிளர்ச்சிகள் நிகழ்கின்றன. அது, நமது அண்டை நாடுகளின் ஆதரவுடன் நிகழ்கிறது. பயங்கரவாதிகளால் பரவ விடப்படும் தவறான தகவல்களால் பலர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். எனினும், அங்குள்ள சூழ்நிலை நமது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று விபின் ராவத் கூறினார். 
  அப்போது, பாலாகோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரேடார் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக விபின் ராவத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விபின் ராவத், "சில ரேடார்கள் மேகங்களை ஊடுருவி கண்காணிக்கக் கூடியவை. சில ரேடார்களின் இயக்க அமைப்பில் அத்தகைய வசதி இருக்காது' என்று கூறினார். 
  செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த பிரதமர் மோடி, "பாலாகோட் தாக்குதலை நடத்தும் நேரத்தில் மோசமான வானிலை காரணமாக தாக்குதல் திட்டத்தை ஒத்திவைக்க பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், நமது போர் விமானங்கள் ரேடார்களின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க மேகங்கள் உதவும் என்று கூறி, தாக்குதலை நடத்துமாறு அறிவுறுத்தினேன்' என்று கூறியிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai