சுடச்சுட

  

  ஜேட்லி உடல்நிலை தொடர்பான செய்திகளில் உண்மையில்லை: மத்திய அரசு மறுப்பு

  By DIN  |   Published on : 27th May 2019 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Arun_Jaitley

  பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது, அடிப்படை முகாந்திரமில்லாதது என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
  அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம், ஜேட்லி சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அக்காலக்கட்டத்தில், மத்திய நிதியமைச்சர் பொறுப்பு ஜேட்லியிடம் இருந்து பெறப்பட்டு, பியூஷ் கோயலிடம் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஜேட்லியின் உடல்நிலை சீரானதும் மீண்டும் நிதி இலாகா அளிக்கப்பட்டது.
  இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜேட்லி கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு ஜேட்லி வியாழக்கிழமை திரும்பினார். அதேநேரத்தில், மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் வகையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.
  இதனிடையே, சில தொலைக்காட்சிகளில் ஜேட்லியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்திகள்  வெளியாகின. இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் சிதான்சு கர் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்பாக குறிப்பிட்ட சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானது மற்றும் அடிப்படை முகாந்திரமில்லாதது ஆகும். வதந்தி குறித்து தெளிவுப்படுத்தும்படி ஊடகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.
  அருண் ஜேட்லியின் நண்பரான ரஜத் ஷர்மா, மாநிலங்களவை எம்.பி. ஸ்வபன் தாஸ் குப்தா ஆகியோரும், ஜேட்லியின் உடல்நிலை தொடர்பான செய்திகளை மறுத்துள்ளனர்.
  அருண் ஜேட்லியைத் தொடர்பு கொண்டு, அவரின் பதிலை செய்தியாளர்கள் அறிய முயன்றனர். ஆனால் அவரை செய்தியாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வீட்டில் அருண் ஜேட்லி ஓய்வெடுத்து வருவதாக அவரது அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டது.
  அதேநேரத்தில், அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து அறிந்த வட்டாரங்கள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் அருண் ஜேட்லி இடம்பெற மாட்டார் என்றும், பிரிட்டன் அல்லது அமெரிக்காவுக்கு அவர் சிகிச்சைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தன. ஜேட்லி, மிகவும் பலவீனமாக தற்போது இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
  ஜேட்லியுடன் ஆர்பிஐ ஆளுநர் சந்திப்பு: இதனிடையே, தில்லியில் அருண் ஜேட்லியை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இதுகுறித்து சுட்டுரையில் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட பதிவில், "அருண் ஜேட்லியை மரியாதை நிமித்தமாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்தித்தேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai