சுடச்சுட

  

  பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 27th May 2019 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  reddy-modi

  தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அவரை சந்தித்துப் பேசிய, ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி.

  ஆந்திரத்தின் புதிய முதல்வராக பதவியேற்க இருப்பவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார். 
  ஆந்திர மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
  இதையடுத்து, மாநில முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெகன்மோகன், தில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். பின்னர் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து பேசினார். 
  இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது: 
  ஆந்திர மக்களிடம் பெருந்தன்மை காட்டுமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்த முடியுமே தவிர, வற்புறுத்தவோ, கட்டளையிடவோ இயலாது.
  சிறப்பு அந்தஸ்துக்காக நாம் சிலரை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. சிறப்பு அந்தஸ்து என்பது ஆந்திரத்துக்கான உரிமை. அதில் வேறு எவரும் பங்கு கோர இயலாது என்பதால் அதற்காக சண்டையிட விரும்பவில்லை. 
  பிரதமர் மோடியை சந்திக்கும்போதெல்லாம், சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை நினைவூட்டுவேன். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நிச்சயம் ஒருநாள் நிகழும். 
  மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 250 தொகுதிகளே கிடைத்திருந்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸூக்கு அது ஒரு அருமையான தருணமாக அமைந்திருக்கும். ஆனால், அந்தக் கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி பலத்துடன் உள்ளது. எனவே, ஆட்சியமைக்க எங்களின் ஆதரவு அவர்களுக்கு தேவையில்லை. 
  எனவே, சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பொருத்த வரையில் மிக அழுத்தமாக வலியுறுத்த இயலாது. எனினும், பிரதமரை சந்தித்து, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினோம். மாநிலத்தை திறம்பட நிர்வகிக்க, பிரதமரின் ஆதரவு தேவை. 
  ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்கும்போது, அதன் கடன் மதிப்பு ரூ.97,000 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் தொகை ரூ.2.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கான வட்டித் தொகை மட்டுமே ஆண்டுக்கு ரூ.20,000 கோடியாக உள்ளது. அசல் மற்றும் வட்டி சேர்த்து, ஆண்டுக்கு ரூ.40,000 கோடியாக வருகிறது. 
  இத்தகைய இக்கட்டான சூழலில் இருக்கும் ஆந்திரத்துக்கு, மத்திய அரசிடம் இருந்து தேவைப்படும் ஆதரவை பிரதமரிடம் விளக்கினோம். எங்களின் கோரிக்கையை பிரதமர் மோடி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார். அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். 
  அமித் ஷாவுடன் சந்திப்பு: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து, எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அவரிடமும் எடுத்துரைத்தோம்.  வரும் 30-ஆம் தேதி ஆந்திர முதல்வராக நான் பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள விஜயவாடா வருமாறு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
  நாயுடு திட்டங்களில் விசாரணை: ஆந்திரத்தில் பொலாவரம் நீர்ப்பாசனத் திட்டம் நிறைவு செய்யப்படும்.  முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுவது குறித்து விசாரிக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai