சுடச்சுட

  

  ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை இல்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  By DIN  |   Published on : 27th May 2019 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supremeCourt

  ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
  பிரான்ஸின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், "ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை' என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
  இதனிடையே, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை, ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது. அந்த ஆங்கில நாளிதழின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் செளரி, யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
  இவை தவிர ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் வழக்குரைஞர் வினீத் தந்தா ஆகியோர் சார்பிலும் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்கள் அடிப்படையிலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. பின்னர், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
  இந்நிலையில், மத்திய அரசின் எழுத்துப்பூர்வ வாதங்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  ரஃபேல் ஒப்பந்தத்தில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டதற்கான நடைமுறை, போர் விமானங்களின் விலை மற்றும் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக இந்திய தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது ஆகிய மூன்று விஷயங்களில் தாங்கள் தலையிடுவதற்கான உறுதியான காரணம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுமா அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை.
  நாளிதழ் செய்திகளையும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து முறைகேடாக எடுக்கப்பட்ட ரகசிய ஆவணங்களின் நகல்களையும் அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அந்த ஆவணங்கள், முழுமையற்றவை.
  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை அளித்தார். போர் விமானங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக மனுதாரர்கள் முன்வைத்த பிரதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது அந்த அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது. 
  இதேபோல், போர் விமான உதிரி பாகங்கள் தயாரிப்புக்காக இந்திய தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதிலும் அரசுக்கு எந்த பங்கும் இல்லை. அது, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் முடிவாகும். இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு உண்மைகளை மறைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முறையற்றது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai